50 ரூபாய் கேட்டு தர மறுத்த உறவினருக்கு கத்திக்குத்து: தடுக்க சென்ற மகனுக்கும் காயம்…கோவையில் அதிர்ச்சி..!!

Author: Rajesh
29 April 2022, 5:43 pm

கோவை: 50 ரூபாய் கொடுக்க மறுத்த உறவினருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் அய்யாச்சாமி (65). இவரது இரண்டு மகன் மற்றும் இரண்டு மகள்கள், திருமணம் முடித்து தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வசித்து வரும், அய்யாசாமியின் மூத்த மகன் மணிகண்டன், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தந்தையை பார்க்க கோவை வந்துள்ளார்.


அப்போது, மணிகண்டன் சுண்டக்காமுத்தூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது, அவரது உறவினரான ராமசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சுதர்சன் (50) என்பவர் மணிகண்டனிடம் 50 ரூபாய் பணம் கேட்டதாக தெரிகிறது. ஆனால், மணிகண்டன் பணம் தர மறுத்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சமாதானம் ஆகி இருவரும் அங்கிருந்து சென்றனர்.

இந்நிலையில், மீண்டும் சுதர்சன் தனது நண்பரான ராஜேந்திரன் என்கிற மாரிசாமி (48). என்பவருடன் அய்யாசாமியின் வீட்டிற்கு வந்து பணம் கேட்டு கொடுக்காததை கூறி, மணிகண்டனை வெளியே வரச்சொல்லி தகாத வார்த்தையில் சத்தம் போட்டுள்ளார். அப்போது வெளியே வந்த அய்யாசாமியிடம், சுதர்சன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, அவருடன் வந்த ராஜேந்திரன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அய்யாச்சாமியை குத்தியுள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மணிகண்டன், ஓடிவந்து தடுத்தபோது அவருக்கும் கத்தி குத்து விழுந்துள்ளது. சம்பவத்தில், படுகாயமடைந்த மணிகண்டன் மற்றும் அய்யாசாமி, சுண்டக்காமுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், அய்யாச்சாமி அளித்த புகாரின் பேரில், ராஜேந்திரன் என்கிற மாரிசாமி (48) மற்றும் சுதர்சன் (50) இருவர் மீதும் பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜேந்திரனை கைது செய்தனர். மேலும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வழக்கில் தொடர்புடைய, தலைமறைவாக உள்ள சுதர்சனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். வெறும் ஐம்பது ரூபாய் கொடுக்க மறுத்ததால், உறவினரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற நபர்களால் சுண்டக்காமுத்தூர் பகுதியில் பரபரப்பு நிலவியது.

  • tamannaah dialogue in odela 2 trailer trolled by netizens பூமாதா, கோமாதா… படத்தில் பேசிய வசனத்தால் ட்ரோலுக்குள்ளாகும் தமன்னா…