வீட்டில் எளிதில் கிடைக்கும் தக்காளி வைத்து ஃபேஷியல் செய்வது எப்படி???
Author: Hemalatha Ramkumar29 April 2022, 5:31 pm
விலை குறைவான மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு பொருள் தக்காளி. நாம் சந்தித்து வரும் சில சரும பிரச்சனைகளை இயற்கை முறையில் எந்த வித பக்கவிளைவுகளும் இன்றி தக்காளியை வைத்து தீர்வு காணலாம்.
தக்காளி முகச்சுருக்கம் மற்றும் வயதான தோற்றத்தை சரி செய்கிறது. தக்காளியைப் பயன்படுத்தி முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி முகத்தை பொலிவாக வைத்து கொள்ளலாம். தக்காளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி6, வைட்டமின் சி, உள்ளது. வைட்டமின் டி சத்தானது முகத்தில் உள்ள கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும். இது முகத்தின் நெகிழ்வு தன்மையை தக்க வைக்கிறது.
தக்காளியை வைத்து நம் சரும பிரச்சனைகளை எவ்வாறு சரி செய்யலாம் என்று பார்ப்போம்.
சருமம் பொலிவு பெற:
வெயிலில் சுற்றுவதால் ஏற்படக்கூடிய சரும பொலிவு மற்றும் கருமையை போக்கவும், அழுக்குகளை நீக்கவும் தக்காளி பயன்படுகிறது. தக்காளியில் சாலிசைலிக் ஆசிட் சருமத்தை வறட்சி அடையாமல் பாதுகாக்கிறது. இதனை, வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்துவதால் முகம் பொலிவு பெறுகிறது.
தக்காளி சாறு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அந்தக் கலவைய முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்கவும் பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.
எண்ணெய் பசை நீக்கும் தக்காளி சாறு:
சிலருக்கு முகத்தில் எண்ணெய் பசை இருந்து கொண்டே இருக்கும். அதனை மாற்ற வேண்டும் என்றால்? ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளவும் அதில் கடலைமாவு, பயத்தமாவு, ஒரு சிட்டிகை கஸ்தூரி மஞ்சள் மற்றும் தக்காளி சாறு மூன்று டேபிள்ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து 20 நிமிடம் ஊற வைத்து முகத்தை கழுவ வேண்டும்.
தக்காளி சாறு ஃபேஸ்வாஷ்:
வீட்டில் இருக்க கூடிய தக்காளியை வைத்தே ஃபேஸ்வாஷ் செய்து விடலாம். முதலில் ஒரு கிண்ணத்தில் தக்காளியை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். பின் அதில் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடவும். இப்படி செய்வதால் முகம் பொலிவோடு காணப்படும்.
முகத்தில் உள்ள கருமை, தழும்புகள் மறைய:
பலருக்கு முகத்தில் தழும்புகள், கருமை, கரும்புள்ளிகள் மறைய வேண்டும் என்று நினைப்பவர்கள். தக்காளி சாறு தேவையான அளவு, கடலைமாவு 1டேபிள்ஸ்பூன், அரிசி மாவு 1டேபிள்ஸ்பூன், முல்தானி மட்டி 1/4 ஸ்பூன், ஒரு சிட்டிகை கஸ்தூரி மஞ்சள் அனைத்தையும் ஒன்றாக கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இப்படி, செய்வதால் முகத்தில் உள்ள கருமை, கரும்புள்ளிகள், தழும்புகள் மறைந்து முகம் பொலிவுடனும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.
தக்காளி சாறு ஃபேஷியல்:
இன்றைய காலகட்டத்தில் முக அழகை பராமரிக்க வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி எளிய முறையிலும் எந்த வித செல்லும் இன்றி ஒரு ஃபேஸ்பேக் தயாரிக்கலாம். இது முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி முகத்தை பளிச்சென்று ஆக்கும்.
ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் தக்காளி சாறு எடுத்துக் கொள்ளவும் . அதில் கடலைமாவு ஒரு ஸ்பூன், கற்றாழை ஜெல் 1/2 ஸ்பூன், மூன்றையும் நன்கு கலந்து , பின் அதை முகம் முழுவதும் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.15 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஷியல் செய்வதால் முகம் பளபளப்பாகவும், பொலிவுடன் இருக்கும்.
இப்படி, வீட்டில் எளிமையாக கிடைக்கக்கூடிய தக்காளியில் இவ்வளவு நன்மைகள் உள்ளன. ஆகவே, தக்காளியைப் பயன்படுத்தி முகத்தை பொலிவாக வைத்து கொள்ளுங்கள்.