சக மாணவிகள் ராகிங்.. சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை : உடலை வாங்க மறுப்பு.. 3 மணி நேர போராட்டம்.. முற்றுப்புள்ளி வைத்த போலீஸ்!!
Author: Udayachandran RadhaKrishnan1 May 2022, 4:44 pm
சக மாணவிகள் கிண்டல் அடித்ததால் செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். விவசாயியான இவருக்கு கவிப்பிரியா என்ற 19 வயது மகள் உள்ளார். இவர் செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு சட்டப்படிப்பு படித்து வந்தார்.
விடுதியில் தங்கி பயின்ற மாணவியை சக சட்டக்கல்லூரி மாணவிகள் கேலியும், கிண்டலும் செய்து வந்ததாக தெரிகிறது. இதை சகித்துக்கொள்ள முடியாமல் தனது தந்தைக்கு தொலைபேசியில் கூறிவிட்டு ஊருக்கு புறப்பட்டு உள்ளார்.
அவரை சக மாணவிகள் ஓரிரு நாட்களில் தேர்வு நடைபெற இருப்பதால், தேர்வை முடிந்த விட்டு ஊருக்கு செல்லலாம் என சமாதானப்படுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று கவிப்பிரியா விடுதியில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சக மாணவிகள் கவிப்பிரியா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனே அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் கவிப்பிரியா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கவிப்பிரியா மரணத்தில் நியாயம் வேண்டும் என பெற்றோர்கள் உறவினர்கள் உடலை வாங்க மறுத்தனர்.
இதையடுத்து 3 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்பு போலீசாரின் சமாதான பேச்சுக்க பின்பு உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள் தஞ்சைக்கு கொண்டு செல்கின்றனர்.
தமிழகத்தில் மாணவர்களுக்குள் ஏற்பட் பிரச்சனையால் நெல்லையில் மாணவன் கொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது சட்டக்கல்லூரி மாணவி ராகிங்கால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.