பஸ் ஜன்னலில் தொங்கியடி பயணிக்கும் பள்ளி மாணவர்கள்… ஆபத்தை உணராத மாணவர் சமுதாயம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
Author: Babu Lakshmanan3 May 2022, 10:27 am
திருவள்ளூரில் பேருந்து ஜன்னலில் மாணவர்கள் தொங்கியபடி பயணித்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மை காலமாக பள்ளிகளில் மாணவர்கள் அட்டகாசம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, வகுப்பறையில் பாடலுக்கு நடனம் ஆடுவதும், ஆசிரியர்களை அவமதிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதும், ஆசிரியர்களை தாக்க முயல்வதும், தகாத வார்த்தைகளில் திட்டி பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
மேலும், பேருந்துகளில் தொங்கிய படி பயணிப்பதும், அதனைக் கண்டித்த பேருந்து ஓட்டுநர் நடத்துர்களை தாக்குவதும் அரங்கேறி வருகிறது. அதேபோல, மாணவர்களிடையே கோஷ்டி மோதலும் நடந்தது. இதனால், பள்ளிகளில் மாணவர்களின் செயல்பாடுகள் மீது கல்வி ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை வழியாக சூலூர்பேட்டை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் புல்லரம்பாக்கம், நெய்வேலிகூட்டு சாலை, ஒதப்பை கிராமத்திலிருந்து சீதஞ்சேரி மற்றும் ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர்.
மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்து கொண்டிருந்ததே தவறு என்று பார்க்கப்பட்ட நிலையில், சிலர் பேருந்தின் ஜன்னல் மீது ஏறி, ஆபத்தின் வீரியத்தை உணராமல் அட்டகாசம் செய்து கொண்டிருந்தனர். இதனை பேருந்து பின்னே சென்ற காரில் சென்றவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இந்த வீடியோ வெளியாகி பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . இதுபோன்ற செயல்களை தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து தடுக்காவிட்டால், பிற மாணவர்களுக்கு இது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.