40 வருடங்களுக்கு மேலாக இருந்த சிபிஎம் கட்சி கொடிக்கம்பத்தை அகற்றிய போலீசார் : அத்துமீறிய கட்சியினர்… குவிந்த காவலர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 May 2022, 12:30 pm
Quick Share

கோவை : 40 ஆண்டுகளுக்கும் மேலாக அமைக்கப்பட்டிருந்த சிபிஎம் கட்சியின் கொடிக்கம்பத்தை காவல்துறை உரிய விளக்கமின்றி அகற்றிய நிலையில், கட்சியினர் காவல்துறையினரின் எதிர்ப்பையும் மீறி அதே பகுதியில் மீண்டும் கொடிக்கம்பத்தை அமைத்ததால் பரபரப்பு நிலவி வருகிறது.

கோவை சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக்கம்பம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அமைக்கப்பட்டிருந்தது.

மேதினம், கட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளின் போது, அக்கட்சியின் மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகள் இக்கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, கொடியேற்றுவதற்காக கட்சியை சேர்ந்த சிலர், கொடிக்கம்பத்தை தயார் செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த காட்டூர் காவல்நிலைய ஆய்வாளர் லதா தலைமையிலான போலீசார், கொடிக்கம்பத்தை அகற்றுமாறு எச்சரித்துள்ளனர்.

இதையடுத்து தற்காலிகமாக கொடிக்கம்பத்தை கட்சி ஊழியர்கள் அகற்றிய நிலையில், இன்று காலை அதே பகுதியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் ஆகியோருடன் அப்பகுதியில் திரண்ட அக்கட்சியினர், 40 ஆண்டுகளாக இருந்த கொடிக்கம்பத்தை மீண்டும் அங்கேயே நட முயன்றனர். தகவலறிந்து வந்த போலீசார், இதற்கு மறுப்பு தெரிவித்ததால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆனால் கட்சியினர், அப்பகுதியில் மீண்டும் கட்சி கொடிகம்பத்தை நட்டுவிட்டு அங்கிருந்து சென்றனர். இதையடுத்து போலீசார் அங்கு சிறிது நேரம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

  • sarathkumar latest news நடுரோட்டிற்கு வந்த சரத்குமார்…வைரலாகும் வீடியோவால் பரபரப்பு..
  • Views: - 1147

    0

    0