இந்த மாதிரி இட்லி சாம்பார் செய்தா பத்து இட்லி கூட சாப்பிடலாம்!!!

Author: Hemalatha Ramkumar
3 May 2022, 1:12 pm

தென்னிந்தியாவில் பிரபலமான உணவுகளில் ஒன்று இட்லியும், சாம்பாரும் தான். குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று. துளியும் எண்ணெய் இல்லாமல் இட்லி ஆவியில் வேக வைக்கப்படுவதால் அனைத்து வயதினருக்கும் எளிதில் செரிமானம் ஆகிவிடும்.

இட்லிக்கு பல வகையான சட்னி இருந்தாலும் , கமகமக்கும் சாம்பார் இருந்தால், 4 இட்லி சாப்பிடுபவர்கள் கூட 6 இட்லி சாப்பிடுவார்கள்.
வாங்க கமகமக்கும் மணத்துடன் எப்படி இட்லி சாம்பார் செய்வது என்று பார்ப்போம் .

தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு – 1/2 கப்
பாசிப்பருப்பு – 1/2 கப்
வெங்காயம் – 1(பெரியது)
சின்ன வெங்காயம் – 16
பூண்டு – 2 பற்கள்
தக்காளி – 2
பச்சைமிளகாய் – 1
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன்
சாம்பார் தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லி தழை – சிறிதளவு
கேரட் – 1
பீன்ஸ் – 4
கத்தரிக்காய் – 1
முருங்கைக்காய் – 1
புளி – ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
*முதலில் ஒரு குக்கரில் துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, பெரிய வெங்காயம் 1, தக்காளி, பூண்டு, பச்சைமிளகாய, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து மூன்று விசில் வைத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* பீன்ஸ், கேரட், முருங்கைக்காய், கத்தரிக்காய் ஆகியவற்றை சிறு‌ துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

*பிறகு, அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்க்கவும்.

*பின்பு நறுக்கி வைத்துள்ள காய்கறிகள் சேர்த்து நன்கு வதக்கவும்.

* பின்பு சாம்பார்தூள் சேர்த்து வதக்கி விட்டு தண்ணீர் சிறிதளவு ஊற்றி காய்கறிகளை வேக விடவும்.

*காய்கறிகள் வெந்தவுடன் வேக வைத்த பருப்பை சேர்த்து கொதிக்க விடவும்.

* பிறகு புளிக்கரைசல் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

* பின்பு சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

*இப்போது சுவையான கமகமக்கும் இட்லி சாம்பார் ‌தயார்.

*இந்த இட்லி சாம்பாரை சுடச்சுட இட்லியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!