டிப்பர் லாரி வாடகை கட்டணத்தை 30% உயர்த்த கோரிக்கை : 2வது நாளாக லாரி மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்..!!
Author: Babu Lakshmanan3 May 2022, 1:21 pm
சென்னை : நிலக்கரி கொண்டு செல்லும் டிப்பர் லாரி வாடகை கட்டணத்தை 30 சதவீதம் உயர்த்தி வழங்கக்கோரி சென்னை எண்ணூர் காட்டுபள்ளி சுற்றுவட்டார லாரி மற்றும் டிப்பர் லாரி உரிமையார்கள் சங்கத்தினர் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை எண்ணூர் காட்டுபள்ளி சுற்றுவட்டார லாரி மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், டீசல் விலை உயர்வு ,வாகன உதிரிபாக விலை உயர்வு போன்ற காரணங்களால் டிப்பர் லாரி உரிமையாளர்கள் தங்களது தொழில் செய்ய முடியாமல் கடும் நஷ்டம் அடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்றப்பட்ட வாடகை கடந்த இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை என்றும், டீசல், சுங்கவரி கட்டணம் உதிரிபாங்கள் போன்றவை விலை உயர்ந்த நிலையில், தங்களுக்கான வாடகை கட்டணம் டன் ஒன்றுக்கு 400 ரூபாய் முதல் 450 ரூபாய் வரை மட்டுமே வழங்கப்படுவதாகவும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
எனவே, 30 சதவீதம் வாடகையை கூடுதலாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிலக்கரியானது லாரிகள் மூலம் ஆந்திரா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களுக்கும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் இரும்பு உருக்கு ஆலை, செங்கல் சூளை தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி கொண்டு செல்வதாகவும் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
எனவே வாடகை கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி
காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். அதன்படி, டிப்பர் லாரிகளை இயக்காமல் இரண்டாவது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலக்கரி டிப்பர் லாரி வேலைநிருத்தப்போராட்டம் காரணமாக தனியார் மின் உற்பத்தி நிலையங்கள், இரும்பு உருக்கு ஆலைகளுக்கும், நிலக்கரி கொண்டு செல்லும் பணிகள் இரண்டாவது நாளாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது.