‘அரசு பள்ளிகளை போன்று அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் உள்ஒதுக்கீடு வேண்டும்’: ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்..!!

Author: Rajesh
3 May 2022, 5:33 pm

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது போன்று, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் மயில் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் கரூரில் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. அச்சங்கத்தின் மாநில தலைவர் மணிமேகலை தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் மயில் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் குளித்தலையில் ஆசிரியர் ஒருவரின் தற்காலிக பணியிட நீக்கத்தை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்திய 7 ஆசிரியர்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 16ம் தேதி அச்சங்கத்தின் சார்பில் பேரணி நடத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்புறம் பெருந்திரள் முறையீடு செய்வது, தொடக்கக் கல்வித் துறையில் இதுவரை நடைபெறாமல் உள்ள மாவட்ட மாறுதல், மன்மொத்த மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் மயில், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதை போன்று அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு 2.5% வழங்க வேண்டும்.

அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு 1000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படுவது போன்று அரசு உதவி பெறும் மாணவிகளுக்கும் வழங்க வேண்டும், இணையத்தில் நாள்தோறும் தேவையற்ற பதிவுகளை மேற்கொள்ளக் கூறுவதை பள்ளிக் கல்வித் துறை கைவிட வேண்டும் என்றார்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 940

    0

    0