தக்காளி தொக்கு: டிபன், சாப்பாடு இரண்டிற்கும் ஏற்ற ரெசிபி!!!
Author: Hemalatha Ramkumar7 May 2022, 12:37 pm
தக்காளி தொக்கு சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, தயிர் சாதம் ஆகியவற்றுடன் தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும். தக்காளி தொக்கை நல்லெண்ணெய் சேர்த்து செய்வதால் சூடான சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். இந்த தக்காளி தொக்கிற்கு அப்பளம், வத்தல் இருந்தாலே போதும் விருந்து சாப்பிட்டது போல் இருக்கும். இந்த ருசியான தக்காளி தொக்கு எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
தக்காளி – 1/2 ( கிலோ)
வெங்காயம் – 3
பச்சைமிளகாய் – 3
கடுகு, உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
பட்டை – 1
சோம்பு – 1/2 ஸ்பூன்
பூண்டு – 6 பல்
மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லி தழை – சிறிதளவு
செய்முறை:
* முதலில் தக்காளி மற்றும் வெங்காயம் இரண்டையும் தனித்தனியாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
*பூண்டு தட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* அடுத்து அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு, ஒரு கொத்து கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து தாளிக்கவும்.
* பின்பு அரைத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளி விழுதினை சேர்த்து நன்கு வதக்கவும்.
* பின்பு வதக்கிய அனைத்தும் பொன்னிறமாக வந்ததும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கி மூடிப் போட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்.
* பின்பு தக்காளி நன்கு சுருண்டு, எண்ணெய் பிரிந்து தொக்கு பதத்திற்கு வந்தவுடன், சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
* இப்போது சுவையான தக்காளி தொக்கு தயார்.