இரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள்… டன் கணக்கிலான மாம்பழம், சாத்துக்குடி அழிப்பு.. கோவையில் அதிகாரிகள் அதிரடி!!
Author: Babu Lakshmanan11 May 2022, 4:19 pm
கோவையில் இரசாயனம் மூலம் பழுக்க வைத்த 12 டன் மாம்பழம், 2 டன் சாத்துக்குடி அழிக்கப்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரண் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான அதிகாரிகள், கோவை பெரிய கடை வீதி, வைசியால் வீதி, கருப்பன்ன கவுண்டர் வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 6 குழுக்களாக பிரிந்து இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் 42 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இரசாயனம் மூலம் பழுக்க வைத்த சுமார் 12 டன் 350 கிலோ மாம்பழம் மற்றும் 2 டன் 350 கிலோ சாத்துக்குடி ஆகியவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பழங்கள் குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது.
அழிக்கப்பட்ட பழங்களின் சந்தை மதிப்பு ரூ.8 லட்சம். இதையடுத்து ஆய்வின் முடிவில் 12 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.