இந்தி கற்றுக்கொள்ள நாங்க தயார்…ஆனா, எங்க தமிழ்நாட்டோடு சிஸ்டத்தை யாரும் மாற்ற முடியாது : அமைச்சர் பொன்முடி..!!

Author: Babu Lakshmanan
13 May 2022, 1:31 pm

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, இந்தி மொழி விவகாரம் தொடர்பாக பேசியுள்ளார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 37வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பி.எச்டி., பட்டம் பெற்ற 1687 மாணவர்கள், முதுநிலை, இளநிலை பட்டங்களில் பல்கலை அளவில் முதலிடம் பெற்ற 267 மாணவர்களும், பட்டங்களையும், தங்க பதக்கத்தையும் நேரடியாக பெற்றனர். 1,504 பேர் எம்.பில்., 1,50,424 பேர் இளநிலை பட்டமும், 48,034 பேர் முதுநிலை பட்டம் என 2,04,362 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி,தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தலைமை வகித்து மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது :- பட்டம் பெற்ற மாணவர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலை உருவாக்குபவர்கள் ஆக மாற வேண்டும். இதற்காக தான் தமிழக முதல்வர் ‘நான் முதல்வன்’ எனும் திட்டத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் அதிகப்படியாக மாணவிகள் பட்டம் பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக, 2,04,450 பட்டம் பெறும் மாணவர்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். இதுதான் தமிழகத்தின் சிறப்பு.

நமது மாநிலத்தின் கல்வி வளர்ச்சியை ஆளுநர் பல இடங்களில் வெளிப்படையாக பாராட்டியுள்ளார். தமிழக முதல்வர் கல்வியையும், சுகாதாரத்தையும் இரு கண்கள் என கூறியுள்ளார். அதனால்தான் கல்விக்கு தமிழகத்தில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

கோவையை பொருத்தவரை இது ஒரு தொழில் நகரம். எனவே அதிக அளவில் தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும். கல்வி மட்டுமின்றி இங்குள்ள தொழில்துறை சார்ந்த பயிற்சியையும் மாணவர்கள் படிக்கும்போது மேற்கொள்ள வேண்டும். இதில் பாரதியார் பல்கலைக்கழகம் முன்னோடியாக விளங்கும் என நான் உறுதியாக தெரிவிக்கிறேன்.

ஆராய்ச்சி பட்டம் பெறும் மாணவர்களிலும் அதிகப்படியாக பெண்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. திருச்சி மற்றும் மதுரையில் பங்கேற்ற பட்டமளிப்பு விழாக்களிலும் பெண்கள் அதிக அளவில் பட்டம் பெற்றிருந்தனர். இதை பெருமிதமாக கருத வேண்டும்.

முன்பு ஒரு காலத்தில், பெண்கள் வயதுக்கு வந்ததும் சமையல் கற்றுக் கொள்ளுங்கள் என வீட்டில் இருக்கும் தாய்மார்கள் கூறுவார்கள். அப்போதுதான் திருமணமாகி சென்ற பின்பு அது உதவும் என தெரிவிப்பார்கள். ஆனால், தற்போது பெண்கள் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதைத்தான் பெரியார் கூறினார். இதைத்தான் திராவிட மாடல் என்கிறோம்.

ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் கல்வி கற்க வேண்டும். மிக முக்கியமாக தமிழ் வழிக் கற்ற மாணவர்கள் உயர்கல்வி மேற்கொண்டு உயர்ந்த நிலைகளில் வரவேண்டும்.

நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. இந்திக்கும் எதிரானவர்கள் அல்ல. இந்தி கற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்கள் தாராளமாக கற்றுக் கொள்ளட்டும். அது ஒரு விருப்பமாக இருக்கலாமே தவிர கட்டாயமாக இருக்கக்கூடாது. தமிழகத்தில், உள்ளூர் மொழியாக தமிழும், சர்வதேச மொழியாக ஆங்கிலமும் உள்ளது. இதை தவிர ஹிந்தி எதற்கு என்ற கேள்வி எழுகிறது.

புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல விஷயங்களை கட்டாயம் ஏற்று அதை அமல்படுத்த மாநில அரசு தயாராக உள்ளது. அதே நேரத்தில் தமிழகத்திற்கே உரித்தான கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை காப்பதிலும் உறுதியாக உள்ளது. இதற்காகத்தான் தமிழக முதல்வர் ஒரு குழு அமைத்து தமிழகத்திற்கு என கல்விக் கொள்கையை உருவாக்கி வருகிறார்.

கல்வி கட்டமைப்பில் மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்பது கட்டாயம் தேவை. அந்த வகையில் மாணவர்கள் படிக்கும் போதே தொழில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக அரசு பள்ளிகளில் இருந்து சிறந்த மாணவர்களை உருவாக்க வேண்டும். இந்த விஷயங்களில் ஆளுநரும் உறுதியாக இருக்கிறார்.

மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் தொடர்ந்து துறை சார்ந்த படிப்புகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் மாணவர்களுக்கு அவர்கள் சிறப்பாக கற்று கொடுக்க முடியும். படிப்பதற்கு வயது தடையில்லை என்பதை உணர்ந்து ஆசிரியர்களும் தொடர்ந்து கற்க வேண்டும்’ என உரையாற்றினார்.

  • vijay famous dialogue what bro spoke by ajith in good bad ugly movie “வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… விஜய்யின் வசனத்தை பேசி சீண்டிப்பார்க்கும் அஜித்?