‘என் சாவுக்கு திமுக கவுன்சிலர்தான் காரணம்’… கடிதம் எழுதி வைத்து விட்டு ஊராட்சி செயலர் தூக்கிட்டு தற்கொலை…!!
Author: Babu Lakshmanan14 May 2022, 2:24 pm
வேலூர் அருகே என் சாவுக்கு திமுக கவுன்சிலர் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்து விட்டு ஊராட்சி செயலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா ஒடுகத்தூர் அடுத்த ராமநாயினிகுப்பம் குப்பத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (39). இவருடைய மனைவி காந்திமதி(29). இவர்களுக்கு யாகேஷ்(2) என்ற மகன் உள்ளான். ராஜசேகர் அதே கிராமத்தில் ஊராட்சி செயலாளராக பணி புரிந்து வந்தார். அதேபோல் அதே பகுதியில் திமுகவைச் சேர்ந்த அரி என்பவர் கவுன்சிலராக உள்ளார்.
இந்நிலையில், ஊராட்சிக்கு வழங்கப்படும் நிதிகளை தனக்கு வழங்க வேண்டும் என்று அரி என்பவர் ராஜசேகரை வற்புறுத்தி வந்ததாகவும், இதற்கு மறுப்பு தெரிவித்ததால் உன் வேலையையும், உன் குடும்பத்தையும் ஒழித்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும், ராஜசேகரிடம் உனது தம்பிக்கு ரேஷன் கடையில் வேலை வாங்கி தருவதாக அரி கூறியுள்ளார். இதனை நம்பி பல பேரிடம் கடன் வாங்கி லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால், வேலை வாங்கி கொடுக்கவில்லையாம். பணத்தை திருப்பி கேட்டாலும் மிரட்டியுள்ளார்.
இதனால், மனவேதனயடைந்த ராஜசேகர் நேற்று இரவு கடிதம் ஒன்று எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:- மனைவி காந்திமதி என்னை மன்னித்து விடு, நான் உன்னை விட்டு போறேன். நம் குழந்தையை பத்திரமாக பார்த்து கொள். எனது இந்த முடிவுக்கு திமுக கவுன்சிலர் அரி மட்டுமே காரணம். எனது குடும்பத்தாரோ, நண்பர்களோ காரணம் இல்லை. இது என் முழு சிந்தனையுடன் எடுத்த முடிவாகும், என்று குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காந்திமதி கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பத்மநாபன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஒடுகத்தூர் அருகே திமுக கவுன்சிலரின் தொந்தரவால் ஊராட்சி செயலாளர் கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, ஊராட்சிமன்ற செயலாளரின் தற்கொலை தொடர்பாக தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து தலைமறைவான திமுக கவுன்சிலர் அரியை போலீசார் தேடி வருகின்றனர்.