மண்டபத்தின் லிப்ட் அறுந்து விழுந்து பள்ளி மாணவன் பலி.. முன்னாள் அமைச்சரின் மகள் மீது வழக்குப்பதிவு
Author: Babu Lakshmanan14 May 2022, 4:38 pm
திருமண மண்டபத்தின் லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் முன்னாள் அமைச்சரின் மகள் மீது ஜாமீனில் வெளியே வர முடியாதபடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பத்தில் தனியார் திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, உணவு பரிமாறும் வேலைக்காக வந்த காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தைச் சேர்ந்த பதினோராம் வகுப்பு அரசு பள்ளி மாணவன் சீத்தல் (19), திருவண்ணாமலையைச் ஜெயராமன் (23), விக்னேஷ் (21) ஆகியோர் லிப்டில் இரண்டாவது மாடிக்கு பெரிய பாத்திரத்தில் உணவுடன் பயணம் செய்துள்ளனர்.
அப்போது லிப்டின் இரும்பு ரோப் பாரம் தாங்காமல் அருந்து கீழே விழுந்ததில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள மாசிலாமணி அரசு பள்ளியில் பயிலும் பதினோராம் வகுப்பு படிக்கும் 19 வயது மாணவன் சீத்தல் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரோடு லிப்டில் பயணம் செய்த திருவண்ணாமலையைச் ஜெயராமன், விக்னேஷ் ஆகியோர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்பு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். தலை நசுங்கி உயிரிழந்த மாணவன் சித்தல் சடலம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, திருமண மண்டபத்தின் உரிமையாளரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா மீது ஜாமீனில் வெளியே வர முடியாதபடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.