மாநிலங்களவை தேர்தல்… காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஒதுக்கிய திமுக : வேட்பாளர்களை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!!
Author: Udayachandran RadhaKrishnan15 May 2022, 7:44 pm
தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு ஜூன் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் அந்தந்த மாநில மக்கள்தொகை எண்ணிக்கையின் அடிப்படையிலேயே நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் தரப்படுகிறது. இதன்படி தமிழகத்துக்கு மக்களவையில் 39 பேருக்கும், மாநிலங்களவையில் 18 பேருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்கள் 12 பேரை சேர்த்து 245 உறுப்பினர் இடங்கள் உள்ளன. மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும்.
இங்கு உறுப்பினர்களாக உள்ளவர்களில் 3-ல் 2 பங்கு உறுப்பினர்களின் 6 ஆண்டு பதவிக்காலம் ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை முடிவடையும். இதன்படி வருகிற ஜூன் மாதம் 21-ந் தேதி ஆந்திராவில் 4 பேருக்கும், தெலுங்கானாவில் 2 பேருக்கும் பதவிக்காலம் முடிவடைகிறது.
ஜூன் 29-ந் தேதி தமிழகத்தில் 6 பேருக்கும், மத்தியபிரதேசத்தில் 3 பேருக்கும், சத்தீஷ்காரில் 2 பேருக்கும் பதவிக்காலம் நிறைவடைகிறது. ஜூன் 30-ந் தேதி கர்நாடகத்தில் 4 இடங்கள் காலியாகிறது.
ஜூலை 1-ந் தேதி ஒடிசாவில் 3 இடங்களும், ஜூலை 4-ந் தேதி உத்தரபிரதேசத்தில் 11 இடங்களும், மராட்டியத்தில் 6 இடங்களும், ராஜஸ்தானில் 4 இடங்களும், பஞ்சாபில் 2 இடங்களும், உத்தரகாண்டில் ஒரு இடமும் காலியாகின்றன. ஜூலை 7-ந் தேதி பீகாரில் 5 பேருக்கும், ஜார்க்கண்டில் 2 பேருக்கும் பதவிக்காலம் முடிகிறது.
ஆகஸ்டு 1-ந் தேதி அரியானா மாநிலத்தில் 2 இடங்கள் காலியாகின்றன. இவை எல்லாம் சேர்த்து மேற்கண்ட 15 மாநிலங்களில் மொத்தம் 57 உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது.
இதனால் ஏற்படும் காலியிடங்களுக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை இந்திய தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் அறிவித்தது. வருகிற ஜூன் மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனையொட்டி வருகிற 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. 31-ந் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 1-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் ஜூன் 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஆகும்.
ஜூன் 10-ந் தேதி தேர்தல் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பின்னர் மாலை 5 மணிக்கு ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தமிழகத்தில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகிய தி.மு.க. எம்.பி.க் களும், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார் ஆகிய அ.தி. மு.க. எம்.பி.க்களும் பதவியை நிறைவு செய்கிறார்கள்.
இதைப்போல கர்நாடகத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ், மராட்டிய மாநிலத்தில் ப.சிதம்பரம், உத்தரபிரதேசத்தில் கபில்சிபல் உள்ளிட்டோருக்கும் பதவிக்காலம் நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
அதில் திமுக சார்பில் சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என். ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் திமுக கூட்டணி சார்பில் ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.