அடுத்தது என்ன?….பீதியை கிளப்பும் பஸ் கட்டண உயர்வு : அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்!
Author: Udayachandran RadhaKrishnan16 May 2022, 10:52 pm
கடந்த ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் இரண்டே மாதங்களில், சிமெண்ட், இரும்பு கம்பி, செங்கல், மணல் ஜல்லி எம் சாண்ட் போன்ற கட்டுமான பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்தது.
கட்டுமானப் பொருட்கள் விலை கிடுகிடு உயர்வு
சிமெண்ட், இரும்பு கம்பிகளின் விலை இரு மடங்காக அதிகரித்ததையும் காண முடிந்தது. இதனைக் கட்டுப்படுத்த திமுக அரசு உடனடி நடவடிக்கை எடுத்தும் கூட இன்றுவரை கட்டுமான பொருட்களின் விலை குறைந்தபாடில்லை.
கடந்த மார்ச் மாதம் டாஸ்மாக் மதுபானங்களின் விலை குவார்ட்டருக்கு 10 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது, மதுபானப் பிரியர்களை மிகுந்த கவலைக்கு உள்ளாக்கியது.
பால் பொருட்கள் விலை உயர்வு
அதே மாதத்தில் பால் பவுடர், வெண்ணை, நெய், தயிர், ஐஸ் கிரீம் போன்ற பால் பொருட்களின் விலை லிட்டருக்கு 20 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது.
அண்மையில் சொத்து வரி 25 முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. தவிர ஆண்டுக்கு ஒரு முறை சொத்து வரியை உயர்த்த வகை செய்யும் சட்ட மசோதா ஒன்றும் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சொத்து வரி கடும் உயர்வு
இந்த திடீர் கட்டண உயர்வுகளால் தமிழக மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து எதன் விலையை உயர்த்த போகிறார்களோ?… என்ற பகீர் கேள்வி அனைவரிடமும் எழுந்தது.
எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
இந்த நிலையில்தான், கடந்த வாரம் சேலத்தில் செய்தியாளர்களிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது “கொரோனாவால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சொத்து வரி உயர்வு மக்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை சொத்து வரி உயர்வு என்பது ஏற்க முடியாத ஒன்று. நிதி ஆதாரத்தை திரட்ட திமுக அரசிடம் எந்த திட்டமும் இல்லை. இதனால் விரைவில் போக்குவரத்து கட்டணம், மின் கட்டணம் உயரும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
அமைச்சர் கே.என்.நேரு போட்ட குண்டு
இதற்கு பதில் சொல்வது போல இரு தினங்களுக்கு முன்பு அமைச்சர் கே என் நேரு சேலம் ஏற்காட்டில், செய்தியாளர்களிடம் கூறும்போது, “நிதி ஆதாரத்தை திரட்ட சொத்து வரி, பொது போக்குவரத்து கட்டணத்தை உயர்த்தினால் அதனை செயல்படுத்தாதே என அதிமுக கூறுகிறது. ஆளுங்கட்சியை எதிர்க்கட்சி எதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி குறை சொல்கிறார்கள்.
கடந்த 30 ஆண்டுகாலமாக ஒவ்வொரு பொருளின் விலையும் அதிகரித்தே வந்துள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் எதுவுமே விலை ஏறவில்லையா? எனவே பேருந்து கட்டண உயர்வை பொறுத்தவரை மக்களை பாதிக்காத வகையில் முதலமைச்சர் முடிவெடுப்பார்” என்று தெரிவித்தார்.
சர்ச்சையான அமைச்சர் பேச்சு
அவர் இப்படி சொன்னது தமிழக அரசியல் வட்டாரத்தில் ஒரு சர்ச்சையை கிளப்பியது. நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருக்கும் கே என் நேரு, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரின் இலாகாவிற்குள் தலையிடுவதுபோல் கருத்து தெரிவிப்பது சரியா?…என்ற கேள்வியும் எழுந்தது.
இதைத்தொடர்ந்து ஒரு அமைச்சரின் இலாகாவின் செயல்பாடுகள் குறித்து இன்னொரு துறை சேர்ந்த அமைச்சர், முழு விஷயமும் தெரியாமல் கருத்து தெரிவிக்க கூடாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதாக ஒரு தகவல் தற்போது கோட்டை வட்டாரத்தில் உலா வருகிறது.
அதிர்ச்சி கொடுத்த போக்குவரத்து துறை அமைச்சர்
அதுமட்டுமின்றி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கூறியதை ஓரளவு உறுதி செய்வதுபோல போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,” கேரளா, ஆந்திரா போன்ற பக்கத்து மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. எனவே இந்த மாநிலங்களுக்கு தமிழகத்திலிருந்து இயக்கப்படும் போக்குவரத்துக் கழக பேருந்துகளுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பது சட்டரீதியான விதிமுறை.
அதன் அடிப்படையில், கேரளா, ஆந்திரா போன்ற தொலைதூர மாநிலங்களுக்கான பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதை வைத்துக் கொண்டு கட்டண உயர்வு வரும் என்று எல்லோரும் சொல்வது ஏற்புடையது அல்ல. தமிழகத்தில் மக்களுக்கு பாதிப்பு வராத வகையில், பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் இயக்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்” என்று தெரிவித்தார்.
இந்த கட்டண உயர்வு வெளிமாநில பஸ்களுக்குதான் என்றாலும்கூட அந்த வெளிமாநிலங்களுக்கு செல்லும், அங்கிருந்து வரும் ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த தமிழக பயணிகளின் வயிற்றில் புளியை கரைப்பதாக இருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
மக்களை வாட்டி வதைக்கும் திமுக
“10 வருடங்களுக்கு பின்பு ஆட்சிக்கு வந்திருப்பதால், திமுக அரசு தமிழக மக்களை வாட்டி வதைக்காது என்றே கருதப்பட்டது. ஆனால் நடப்பதோ வேறாக உள்ளது.
குறிப்பாக, மாநிலத்தின் பொருளாதார நிலைமை சீரடையும் வரை சொத்துவரி உயர்த்தபடாது என்று, தனது தேர்தல் அறிக்கையில் திமுக குறிப்பிட்டு இருந்தது.
ஆனால் 20 ஆண்டுகளாக உயர்த்தப்படாத சொத்து வரியை ஒரே ஆண்டில் பல மடங்கு அதிகரித்து விட்டனர். இப்போது வெளிமாநிலங்கள் செல்லும் தமிழக பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள்.
ஏற்கனவே போக்குவரத்துக் கழகங்கள் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. 48 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடனும் உள்ளது என்கிறார்கள்.
வெளிமாநிலம் செல்லும் பேருந்துகள்
அப்படி இருக்கும்போது, அரசு சாதாரண டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் மூலம் ஆண்டுக்கு 1500 கோடி ரூபாயை கூடுதல் செலவு செய்வது ஏன் என்ற கேள்வி எழுகிறது. அரசு சாதாரண டவுன் பஸ்களில் வசதி படைத்த பெண்களும், கை நிறைய சம்பளம் வாங்கும் மகளிரும் இலவசமாக பயணம் செய்கிறார்கள்.
இதுபோன்ற சலுகையை மிகவும் ஏழ்மையான, விளிம்பு நிலையில் இருக்கும் பெண்களுக்கு மட்டுமே அளிக்கவேண்டும். அப்படிச் செய்தால் இதில் ஆண்டுக்கு 800 கோடி ரூபாய் வரை தமிழக அரசால் மிச்சப்படுத்த முடியும். அதேபோல அரசு பணிமனைகளில் பேருந்துகளை சரிவர பழுதுபார்ப்பது, தரமான உதிரிபாகங்களை பயன்படுத்துவது, நிர்வாக கோளாறுகளைக் களைவது போன்றவற்றின் மூலமும் ஆண்டுக்கு சில ஆயிரம் கோடி ரூபாய்களை மிச்சப்படுத்த முடியும். தனியார் பஸ் நிறுவனங்கள் இப்படித்தான் லாபம் ஈட்டுகின்றன. முதலில் வெளிமாநிலங்களுக்கு செல்லும் தமிழக பஸ்களில் தான் கட்டண உயர்வு என்று கூறிவிட்டு, பிறகு அதை மெல்ல மெல்ல தமிழகத்திற்குள்ளும் கொண்டு வந்து விடக்கூடாது.
இந்தக் கட்டண அதிகரிப்பு மின்கட்டண உயர்வுக்கு போடப்படும் அச்சாரமாக இருக்குமோ என்று கருதவும் தோன்றுகிறது.
திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றுமா?
சட்டப்பேரவைத் தேர்தலின் போது மாதாந்திர மின் கணக்கீட்டு முறையை கொண்டு வருவோம் என்று திமுக கூறியிருந்தது. அப்படி நடந்தால் மாதந்தோறும் ஒரு நடுத்தர குடும்பத்துக்கு 750 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை மிச்சமாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஆனால் திமுக அரசு ஒவ்வொரு துறையிலும் கட்டணத்தை அதிகரித்து வருவதால் மாதாந்திர மின் கணக்கீட்டு முறை நடைமுறைக்கு வருமா? தேர்தல் அறிக்கையில் சொன்னபடி குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை எப்படி வழங்குவார்கள்? கேஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய் கிடைக்குமா? என்ற சந்தேகங்களும் எழுகின்றன” என்று அந்த சமூக ஆர்வலர்கள் கவலையோடு கூறுகின்றனர்.