பிரதமர் மோடியை சந்திக்கும் எடப்பாடியார்… அடுத்தடுத்து அதிரடி ஆக்ஷன் தான்… கட்சி நிர்வாகிகள் உற்சாகம்..!!
Author: Babu Lakshmanan17 May 2022, 7:55 pm
அதிமுகவை கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் சசிகலா பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அடிக்கடி செய்தியாளர்களை சந்தித்து பேசுவது, மேடைகளில் பேசுவது என அரசியல் அரங்கில் தனது கவனத்தை நிலைநிறுத்த தேவையான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.
குறிப்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவை தன் கைக்குள் போட்டுக் கொண்டு, அவரையும், அவரது ஆதரவாளர்களையும் தனக்கு சாதகமாக பேச வைத்து, அதிமுகவில் சலசலப்பை உண்டாக்கி வருகிறார். அதிமுகவினரை சீண்டும் விதமாக அவர் என்ன செய்தாலும், அதனை எதிர்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பெரிது படுத்திக் கொள்வதில்லை.
இதனிடையே, சட்டப்பேரவை தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படும் தோல்வியை சந்தித்து இருப்பதால், கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தினார். ஆனால், அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் வரிசையாக நடைபெற்ற ரெய்டு, சசிகலாவின் சுற்றுப்பயணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கட்சிக்குள் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்பதில் சுணக்கம் ஏற்பட்டது.
இந்த சூழலில், அதிமுகவில் சசிகலாவை இணைத்துக் கொள்ள இசைவு தெரிவித்து இருப்பதாகவும், அதேவேளையில் சசிகலாவின் குடும்பத்தினர், குறிப்பாக டிடிவி தினகரன் கட்சிக்குள் வரக் கூடாது என்ற நிபந்தனை போடப்பட்டுள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன.
இப்படியிருக்கையில், புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. தற்போது அதிமுகவின் உள்கட்சி தேர்தல் நடைபெற்று புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்று உள்ளனர். இதை தொடர்ந்து கிராமம் கிராமாக சென்று அதிமுகவை பலப்படுத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக அதிமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அதிமுக நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில், சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தங்கியுள்ளார். அவரது பிறந்த நாளையொட்டி, அவரை சந்திக்க வரும் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்களிடம் அவர் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது சசிகலா விவகாரம், அதிமுக மேல்சபை எம்.பி வேட்பாளர்கள் யார் ? என பல்வேறு விவகாரங்கள் பேசப்பட்டு வருகிறது.
இன்னும் 2 ஆண்டுகளில் பாராளுமன்ற தேர்தல் வர உள்ளதால் கட்சியை பலப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஊராட்சி வாரியாக சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்திக்கவும் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, துறைமுகம் – மதுரவாயல் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி வரும் 26ம் தேதி சென்னை வருகிறார். இந்த வருகையின் போது, பிரதமரை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சி தொடர்பான புகார்களை அளிக்க அவர் முடிவு செய்துள்ளார். இதுபற்றியும் கட்சி நிர்வாகிகளிடம் அவர் கருத்து கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது, என்கின்றனர்.
தேர்தல் தோல்விக்கு பிறகு பலப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கும் அதிமுகவுக்கு, கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள இந்த அதிரடி முடிவுகள் சீனியர் நிர்வாகிகளை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.