தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை…குற்றால அருவிகளில் விழும் கற்கள்: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை…!!
Author: Rajesh19 May 2022, 4:56 pm
தென்காசி: குற்றாலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கற்கள் விழுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மே மாத இறுதியில் சீசன் துவங்கியுள்ள நிலையில், தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் தொடர்ந்து சாரல் மழையும் கன மழையும் பெய்து வருவதால் அவ்வப்போது அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், கடந்த இரு தினங்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பெய்து வரும் சாரல் மழையால் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, பழைய குற்றால அருவி, பிரதான அருவி ஆகியவற்றில் அதிகப்படியான தண்ணீர் வரத்து இருக்கிறது.
இதையடுத்து காலை முதலே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. சாரல் மழையோடு அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தண்ணீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக சிறு கற்கள் மணல் என அருவிகளில் விழத்துவஙகியது.
இதனால் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. அருவிகளில் தண்னீர் குறையும்போது மீண்டும் குளிக்க அனுமதிக்கப்படும் நிலை வருவாகியுள்ளது