கரூர் வந்து முடிந்தால் என்னை தடுத்து பார்க்கட்டும்… அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவால்
Author: Babu Lakshmanan24 May 2022, 11:37 am
சென்னை : கரூர் வந்து முடிந்தால் என்னை தடுத்து பார்க்கட்டும் என்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
பெட்ரோலிய பொருட்களின் கிடுகிடு விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதித்துள்ளனர். இந்த நிலையில், நேற்று பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயையும் குறைத்து மத்திய அரசு அறிவித்தது.
இதைத் தொடர்ந்து, மத்திய அரசைப் போலவே, இன்னும் 72 மணி நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும் என்றும், இல்லையேல், கோட்டையை முற்றுகையிடுவோம் என்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனிடையே, நேற்று கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் கடைவீதியில் நடந்த திமுக அரசின் ஒரு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட போது அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், அண்ணாமலைக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். உங்களது மிரட்டல்களுக்கு திமுக அஞ்சாது என்றும், கர்நாடகத்தில் உள்ள அரசுக்கு சல்யூட் அண்ணாமலை சொந்த ஊரான கரூர் மாவட்டத்தையே தாண்ட முடியாது, என தெரிவித்திருந்தார்.
அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தின் இந்த எச்சரிக்கைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்து பேசியதாவது :- தி.மு.க., ஆட்சியில் ரவுடிகள் தான் அமைச்சர்களாக இருக்கின்றனர் என்பதற்கு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நல்ல உதாரணம். அமைச்சர் போலவா பேசுகிறார்..? கரூரை தாண்ட விட மாட்டாராம். இவர் என்ன, பேரி கார்டு’போட்டு தடுக்கும், ‘செக்யூரிட்டி’ வேலை பார்க்கிறாரா?
அமைச்சரோ, அவரோடு எப்போதும் இருக்கும் அடியாட்களோ, ரவுடிகளோ, நெஞ்சில் தைரியம் இருந்தால், கரூர் வந்து என்னை தடுத்து பார்க்கட்டும்; அதன்பின், என்ன நடக்கிறது என்பது தெரியும். தமிழகத்தில் தற்போது இருப்பது, பழைய பாரதிய ஜனாதா என்ற நினைப்பில் அமைச்சர் பேசி இருந்தால், அதை உடனே மாற்றி கொள்ள வேண்டும், எனக் கூறினார்.