தமிழகத்தில் வளர்ச்சி யாருக்கு..? அதிரடி காட்டும் அண்ணாமலை… அழுது புலம்பும் அழகிரி…!
Author: Babu Lakshmanan24 May 2022, 2:48 pm
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜகவை அரியணையில் அமர்த்திவிட வேண்டும் என்ற துடிப்புடன் மாநிலத் தலைவர் அண்ணாமலை பம்பரம்போல் சுழன்று தீவிர களப்பணி பணியாற்றி வருகிறார் என்பதை அவருடைய ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், அரசியல் வியூகங்கள் மூலம் உணர்ந்து கொள்ள
முடிகிறது.
காங்கிரஸ்
அதேநேரம் 1967-ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சியைப் பறி கொடுத்த பின்பு, மீண்டும் எழுச்சி பெற முடியாமல் தொடர்ந்து காங்கிரஸ் தட்டுத் தடுமாறி வருவது கண்கூடாக தெரிகிறது.
அதுவும் 1989 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் தமிழகத்தில் தனித்து களம் இறங்கவில்லை. பெரும்பாலும் திமுகவுடன் கூட்டணி அமைத்தே போட்டியிட்டு வந்திருக்கிறது. இதனால் காங்கிரஸ் எழுச்சி பெற்றதா? என்றால் அதற்கான விடை பூஜ்ஜியம் என்றே சொல்லவேண்டும்.
ஜி கே மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி, திண்டிவனம் ராமமூர்த்தி, பழனியாண்டி குமரிஅனந்தன், கேவி தங்கபாலு, திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ் இளங்கோவன்,
கே எஸ் அழகிரி என்று காங்கிரசுக்கு எத்தனையோ தலைவர்கள் வந்துவிட்டாலும் கூட அதன் செல்வாக்கு அதிகரிக்கவில்லை. கட்சியும் வளரவில்லை.
மூப்பனார் மட்டும் 1996-ல் தமிழ் மாநில காங்கிரஸ் என்னும் கட்சியை தொடங்கி, திமுகவுடன் கூட்டணி அமைத்து 39 தொகுதிகளை கைப்பற்றினார்.
ஒப்புக்கொண்ட அழகிரி
இந்த நிலையில்தான் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் தலைவர் பதவியை வகித்து வரும் கே எஸ் அழகிரி, தமிழகத்தில் தங்கள் கட்சி கடந்த காலங்களில் வளர்ச்சி அடையவில்லை என்பதை முதல்முறையாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “ராஜீவ் காந்தியை கொலை செய்த குற்றத்துக்காக தண்டனை பெற்ற பேரறிவாளனை ராஜீவ் காந்தி குடும்பத்தினர் பெருந்தன்மையாக மன்னித்துள்ளனர். ஆனால் மக்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. தன்னை சுட்ட கோட்சேவை மன்னிக்கும்படி மகாத்மா காந்தி கூறினார். ஆனால் சட்டம் அவரை தூக்கில் போட்டது.
அதுபோன்றுதான் பேரறிவாளனை விடுவித்ததை எங்களால் ஏற்க இயலாது. தமிழர் என்பதற்காக அவரை விடுவிக்கவேண்டும் என்று சொல்லப்படுவதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. கொலை செய்த ஒருவரை நாம் விடுவிக்கலாமா?
காங்., கோபம்
தமிழகத்தில் கொலை, கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட சுமார் 500 முதல் 600 கைதிகள் வரை 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறைகளில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. அவர்களும் தமிழர்கள்தான்.
ராஜீவ் கொலை கைதிகள் மேலும் 6 பேரை விடுவிக்க முயற்சி நடப்பதாக சொல்கிறார்கள். அப்படியானால் 1998-ம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்களையும் விடுவிக்க வேண்டியதுதானே? அவர்கள் மீதான குற்றச்சாட்டு இன்னமும் நிரூபிக்கப்படவில்லை. அவர்களை ஏன் விடுவிக்கக் கூடாது? நியாயம் என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டும்.
இதையெல்லாம் உணர்ந்துதான் திமுக-காங்கிரஸ் கூட்டணி உருவானது. இத்தகைய முரண்பாடு இருப்பது எல்லோருக்கும் தெரியும். என்றாலும் திமுக தரப்பிலும் எங்களுடன் கூட்டணியை தொடர்ந்தனர். இந்த கொள்கை முரண்பாடுகள் கூட்டணியை ஒருபோதும் சிதைத்தது இல்லை.
பொது எதிரியை வீழ்த்துவதற்காக மாறுபட்ட கொள்கையை கொண்ட கட்சிகள் ஓர் அணியில் திரள்வது இயல்பானது. அந்த வகையில் மதச் சார்பின்மை என்பதுதான் எங்கள் கூட்டணியின் ஒரே இலக்கு. இந்த நிலையில் கொலை குற்றம் செய்தவரை வரவேற்பது ஆச்சரியமாக உள்ளது.
கூட்டணியால் பலவீனம்
தமிழக காங்கிரசுக்கு நான் தலைவரான பிறகு பல்வேறு கருத்து மோதல்கள் எழுந்தது உண்டு. ஆனால் அதை நான் ஊக்கப்படுத்தியது இல்லை. அதனால்தான் நாடாளுமன்ற, சட்டப் பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு 72 சதவீத வெற்றி கிடைத்தது.
எனது அனுபவத்தை பொறுத்தவரை ஒரு கட்சி வெற்றி காண்பதற்கு செல்வாக்கு பெற்று இருக்கவேண்டும் என்பது இல்லை. அந்த செல்வாக்கை வாக்குகளாக மாற்றும் திறன் இருந்தால் வெற்றி வாய்ப்பு கிடைக்கும்.1991-ம் ஆண்டு எங்களுக்கு அபரிமிதமான செல்வாக்கு இருந்தது. ஆனால் அதை அ.தி.மு.க. அறுவடை செய்தது.
கூட்டணி என்பது கட்சியை வலுப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் காங்கிரஸ் மேற்கொண்ட கூட்டணிகள் கட்சியை பலவீனப்படுத்தி விட்டது என்பதே உண்மை. கூட்டணி அரசியல் காங்கிரசின் வளர்ச்சியை குறைத்து விட்டது. காங்கிரஸ் உரிய வளர்ச்சி பெறவில்லை.
ஒரு காங்கிரஸ் தலைவரால் 20 எம்பிக்கள், 40 எம்எல்ஏக்களை பெற முடியும் என்று சொல்வதெல்லாம் தவறான வாதம். ஒரு கூட்டணி வலுவாக இருந்தால் கட்சியையும் அது வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும். இது சொல்வதற்கு எளிது.செயல்படுத்துவதற்கு கடினம்.
தமிழகத்தில் காங்கிரசை வளர்க்க மிகப்பெரிய தியாகம் செய்ய வேண்டும். சில தேர்தல்களில் நாம் தோற்க நேரிடலாம். மக்கள் உடனடியாக நமக்கு ஓட்டு போட்டு விட மாட்டார்கள். காங்கிரஸ் கட்சி தனித் தன்மையுடன் வலிமையாக இருந்தால் மட்டுமே மக்கள் வாக்களிப்பார்கள்.
காங்கிரசின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேவையான விஷயங்களுக்கு திட்டமிட வேண்டும். இலக்கு நிர்ணயிக்க வேண்டும். கடினமாக உழைக்கவேண்டும். அதன்பிறகுதான் காங்கிரசை தமிழகத்தில் ஆட்சியில் அமர வைப்பார்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.
கண்ணீர் விட்ட அழகிரி
“கே எஸ் அழகிரி இப்படிச் சொல்வதன் மூலம் தனது பதவி காலத்தில் காங்கிரசை வளர்க்கவில்லை. கட்சியை வலிமையாக வழிநடத்திச் செல்லவில்லை என்பதை அவரே ஒப்புக்கொள்வது போல் உள்ளது. இதுதான் கட்சி வளராததற்கு முக்கிய காரணம்” என்று மூத்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
“2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிடம் 20 தொகுதிகளை காங்கிரஸ் கேட்டது. ஆனால் எவ்வளவு கெஞ்சிக் கூத்தாடியும் அதில் சரிபாதி தொகுதிகளைத்தான் திமுக ஒதுக்கியது. இதேபோல் 2021 சட்டப் பேரவை தேர்தலில் திமுகவிடம் 42 தொகுதிகளை ஒதுக்கவேண்டும் என்று அழகிரி கோரிக்கை வைத்தார். இதற்காக அவர் அறிவாலயத்திற்கு அலையாய் அலையவும் நேர்ந்தது. கடைசியில் 35 தொகுதிகளாவது தாருங்கள் என்று மன்றாடினார். திமுக தலைமை தன்னை அலையை விடுவதை பார்த்து அழகிரி வேதனையில் கண்ணீர் விட்டு அழுவும் செய்தார்.
ஆனாலும் திமுக 25 இடங்களுக்கு மேல் ஒரு தொகுதி கூட ஒதுக்க முடியாது என்று கராறாகக் கூறிவிட்டது. தங்களுடன் கூட்டணி இல்லை என்றால் திமுக ஆட்சி அமைக்க முடியாது என்பது தெரிந்தே திமுக கொடுத்த தொகுதிகளை காங்கிரஸ் வாங்கிக்கொண்டது. 2006 தேர்தலில் திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் கூட காங்கிரஸ் ஆதரவுடன்தான் கருணாநிதி ஆட்சி செய்தார்.
அப்போது எதிர்காலத்தில் கட்சியை வளர்க்கும் நோக்குடன் திமுக அமைச்சரவையில் தங்களுக்கும் பதவி கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் துணிச்சலுடன் கேட்கவில்லை
தொண்டர்கள் அதிர்ச்சி
அதே நேரம் 2004, 2009 நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மத்திய அமைச்சரவையில் திமுக இடம்பெற்றது. அதுவும், தான் விரும்பிய இலாகாக்களை கேட்டு வாங்கும் அளவிற்கு அப்போது திமுக தலைமையிடம் சாமர்த்தியம் இருந்தது.
இப்போது பேரறிவாளன் விடுதலையை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கொண்டாடுகின்றன. பேரறிவாளனை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின் அவரை முதுகில் தட்டி கொடுத்ததோடு, கட்டிப் பிடித்ததும் தேசிய அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் தமிழக காங்கிரசோ
முதலமைச்சரை கண்டிக்க மனம் இல்லாமல் திணறுகிறது.
பாஜக எதிர்ப்பு என்கிற ஒரே நேர்கோட்டில் திமுகவுடன் இணைந்து பயணம் செய்வதால் சோனியாவும் ராகுலும் இதை மன்னித்து விட்டார்கள் என்று வேறு அழகிரி சொல்கிறார். இதுபோன்ற சூழ்நிலையை கூட தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு திமுக தலைமைக்கு நெருக்கடி அளிக்கவில்லை.
அவர்களுடைய நிலைப்பாடும் எங்களுடைய நிலைப்பாடும் தெரிந்துதான் தமிழகத்தில் திமுக -காங்கிரஸ் கூட்டணியே அமைந்துள்ளது என்று காரணம் வேறு சொல்கிறார்கள். இப்படி தங்களைத் தாங்களே சமாதானப் படுத்திக் கொண்டால் தமிழகத்தில் நூறாண்டுகள் ஆனாலும் கூட காங்கிரஸ் ஆட்சி அமைக்க கூடிய அளவிற்கு வலுவான கட்சியாக உருவாகாது.
ஏனென்றால் பேரறிவாளன் விவகாரத்தைப் பொறுத்தவரை கட்சி மேலிடம் அமைதியாக இருப்பதால் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளும் தொண்டர்களும் கடும் அதிர்ச்சி அடைந்து போயுள்ளனர்.
எதிர்காலம் கேள்விக்குறி
அதேநேரம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது அதிமுக கூட்டணியிலிருந்து துணிந்து வெளியேறி தமிழக பாஜக தனித்து போட்டியிட்டு, 300க்கும் மேற்பட்ட வார்டுகளில் வெற்றி பெற்றது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்றும் அண்ணாமலை அதிரடியாக கூறுகிறார். திமுக அரசு மீது அவர் வைக்கும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை, முதலமைச்சராலோ அமைச்சர்களாலோ நேரடியாக பதிலளிக்க முடியவில்லை. மாறாக அவரை கிண்டல்தான் செய்கிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால் பாஜக தலைவர் அண்ணாமலை எடுத்த பல்வேறு, ஆர்ப்பாட்டம், போராட்டங்களால் திமுக அரசு பின்வாங்கியதையும் காண முடிந்தது. இது இளைஞர்களையும், நடுநிலையாளர்களையும் பாஜகவை நோக்கி திருப்பிவிட்டு உள்ளதை புரிந்து கொள்ள முடிகிறது. இதனால் அக்கட்சி தமிழகத்தில் 3-வது மிகப் பெரிய அரசியல் சக்தியாக மாறுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.
தவிர தமிழக காங்கிரசின் நிலைமை இப்படியே போனால் அதன் எதிர்காலமும் மதிமுக போலாகிவிடும். எதற்காக மதிமுக தொடங்கப்பட்டதோ அந்த நோக்கமே தற்போது இல்லாமல் போய்விட்டது.
இந்த நிலையில்தான் 1993-ம் ஆண்டின் இறுதியில் இருந்தே வைகோவுடன் இணைந்து பயணித்து வந்த மதிமுக மாவட்ட செயலாளர்கள் செவந்தியப்பன், சண்முகசுந்தரம், செங்குட்டுவன் மூவரும் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
தமிழக காங்கிரசுக்கும் அதே போன்ற நிலை உருவாகி கட்சி இருந்த இடம் தெரியாமல் போவதற்கான வாய்ப்புகளும் அதிகம். இதில் கொள்கை வேறு கூட்டணி வேறு என்று சப்பைக்கட்டு கட்டினால் காலப்போக்கில் காங்கிரஸ் கரைந்துதான் போகும்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய அளவில் திமுக தனது செல்வாக்கை நிரூபிக்க விரும்பும். அதனால் தமிழகத்தில் காங்கிரசுக்கு நான்கைந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலே அது பெரிய விஷயமாக கருதப்படும்.
வலுவடையும் பாஜக
அதேநேரம், மோடி தலைமையிலான பாஜக அரசு வருகிற 30-ந்தேதியுடன் 8-வது ஆண்டை நிறைவு செய்கிறது. மேலும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே அக்கட்சி தயாராகியும் விட்டது.
முதல்கட்டமாக உத்தர பிரதேசத்தில் சமூக வலை தளங்களில் நன்கு பயிற்சி பெற்ற 10 ஆயிரம் பேரை களம் இறக்கி உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் இதேபோல் சமூக வலைதளங்களில் ஆயிரக் கணக்கானோருக்கு பயிற்சி அளித்து பாஜகவின் அடிமட்டத்தை வலுப்படுத்த ஓசையின்றி ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.
மேலும் பா.ஜனதா ஆட்சி மூலம் கடந்த 8 ஆண்டுகளில் அனைவருக்கும் வீடு, ஏழை பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்பு, குடிநீர், மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு பலன்களை அனுபவித்து வரும் சுமார் 97 கோடி பயனாளிகளை அடையாளம் கண்டு பட்டியலிட்டும் உள்ளனர்.
இவர்கள் அனைவரையும் பாஜக நிர்வாகிகள் சந்தித்து பேச வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பாஜக நிர்வாகிகள் வீடு, வீடாக கதவை தட்டி மத்திய பாஜக ஆட்சியின் சாதனைகளை விளக்கி சொல்லப் போகிறார்கள்.
தமிழகத்திலும் பாஜக தலைவர் அண்ணாமலை இதற்கான நடவடிக்கைகளை அதிரடியாக எடுத்து வருகிறார்.
அதுபோல காங்கிரசும் அனைத்து மாநிலங்களிலும் விழித்துக் கொண்டு செயல்பட்டால் பாஜகவுக்கு கடுமையான போட்டியை கொடுக்க இயலும். இல்லையென்றால் தேறுவது கடினம்தான்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள்
கூறுகின்றனர்.