இங்க யாருக்கும் பாதுகாப்பில்லை.. சமூக விரோதிகளின் கோரப்பிடியில் தமிழகம்… பாஜக பிரமுகர் கொலைக்கு குவியும் கண்டனங்கள்..!
Author: Babu Lakshmanan25 May 2022, 9:13 am
சென்னையில் பாஜக பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 20 நாட்களில் மட்டும் 18 கொலைகள் அரங்கேறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை குறிப்பிட்டு கருத்து தெரிவித்திருந்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக கூறியிருந்தார்.
ஆனால், இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு போகவில்லை எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், சென்னையில் பொது வெளியில் பாஜக மாவட்ட பட்டியலின தலைவர் பாலச்சந்தர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சிந்தாரிப்பேட்டை சாமிநாயக்கன் தெருவை சேர்ந்தவர் பாலசந்தர் (30), மத்திய சென்னை பாஜக எஸ்.சி. பிரிவு மாவட்டத் தலைவராக இருந்து வந்தார். இவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்து வந்ததால், 24 மணிநேர போலீஸ் பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நேற்று தன்னுடைய பாதுகாப்பு காவலர் பாலகிருஷ்ணன் என்பவருடன் சேர்ந்து சாமிநாயக்கன் தெருவில் நின்று தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, காவலர் டீக்குடிப்பதற்காக பக்கத்தில் இருந்த டீக்கடைக்கு சென்ற நேரத்தில், அங்கு வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் பாலசந்தரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து, தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்:- இங்கே எவருக்கும் பாதுகாப்பு இல்லை. தி.மு.க அரசால் செயல் இழந்து நிற்கும் காவல்துறையால் சாமான்ய மக்களுக்கு எந்தவித நன்மையும் விளையாத சூழல். மத்திய சென்னை மாவட்ட பட்டியலின அணித் தலைவர் சகோதரர் பாலசந்தர் அவர்களின் குடும்பத்தாருக்குத் தமிழக பா.ஜ.க துணை நிற்கும். இளமையும், துடிப்பும் மிக்க எங்கள் சகோதரனைக் கொலை செய்தவர்கள் யார் என்பதை காவல்துறை உடனடியாக கண்டறிந்து கைது செய்ய வேண்டும், என தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- கடந்த 20 நாட்களில் 18 கொலைகள் தமிழகத்தின் தலைநகரில் நடந்ததாக ஊடகங்களில் செய்தி வந்த நிலையில், ஒவ்வொரு நாளும் தொடர்ந்து கொலைகள் நடந்து வருவது சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதையே காட்டுகிறது. சற்றுமுன் பாஜகவின் மத்திய சென்னை மாவட்ட பட்டியல் இன அணித் தலைவர் சகோதரர் பாலசந்தர் அவர்களின் படுகொலை மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் தருகிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காவல்துறை உடனடியாக கொலைக் குற்றவாளிகளை கைது செய்வதுடன், சட்டத்தின் மூலம் கடுமையான தண்டனையும் வழங்கிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மூத்த பாஜக தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- சென்னை பாஜக பட்டியலின பிரிவுத் தலைவர் படுகொலை வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகம் இன்று மதவெறி, சமூக விரோதிகளின் கோரப்பிடியில் என தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்:- கொலை நகரகமாகிவிட்டது சென்னை. இன்று பொது வெளியில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் மத்திய சென்னையின் பாஜக மாவட்ட பட்டியலின தலைவர் பாலச்சந்தர் அவர்கள். தொடர்ந்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருகிறது. தமிழக காவல் துறை ஏவல் துறையாக மாறியது கடும் கண்டனத்திற்குரியது, என குறிப்பிட்டுள்ளார்.