கூட்டு பலாத்காரம் செய்து மீனவப் பெண் எரித்துக் கொலை… இறால் பண்ணையை சூறையாடிய உறவினர்கள்… பற்றி எரியும் வடகாடு..!!!
Author: Babu Lakshmanan25 May 2022, 11:23 am
ராமநாதபுரம் : ராமேஸ்வரம் அருகே மீனவ கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை கூட்டு பலாத்காரம் செய்து எரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் அருகே உள்ள வடகாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு பிரதான தொழிலாக இருப்பது கடல்பாசி சேகரிக்கும் பணியாகும். இதன்மூலம் கிடைக்கும் சொற்ப வருவாயை வைத்து தங்களுடைய குடும்பத்தை நடத்தி வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த கிராமத்தைச் சேர்ந்த 45 வயதுடைய சந்திரா என்ற பெண் கடல்பாசி சேகரிக்கும் பணிக்கு சென்றுள்ளார்.
அப்போது, அங்குள்ள இறால் பண்ணையில் வேலை செய்யும் வடமாநில இளைஞர்கள் சந்திராவை கேலி, கிண்டல் செய்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று வழக்கம் போல கடல்பாசி சேகரிக்கச் சென்ற சந்திரா, வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அவரது உறவினர்கள் கிராமம் முழுவதும் தேடியுள்ளனர். பின்னர் ராமேஸ்வரம் நகர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனிடையே, இறால் பண்ணை அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில், பாதி எரிந்த நிலையில் சந்திரா சடலமாக கிடந்துள்ளார்.
அவரை அடையாளம் தெரியாத நபர்கள் கூட்டு பலாத்காரம் செய்து, கொலை செய்து விட்டு உடலை தீவைத்து எரித்தது தெரிய வந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த சந்திராவின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், இறால் பண்ணையை அடித்து நொறுக்கியதுடன், அங்கு பணியாற்றி வந்த வடமாநிலத்தவர்கள்தான் சந்திராவை கூட்டுப்பாலியல் செய்திருக்கலாம் என்று சந்தேகித்து அவர்களை சரமாரியாக தாக்கினர். மேலும், அவர்களின் வாகனங்களையும் தீவைத்து எரித்தனர்.
மேலும், மீனவப் பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனிடையே, குற்றவாளியாக சந்தேகப்படும் 6 வடமாநிலத்தவர்களை பிடித்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.