விபத்தில் சிக்கிய கார் அப்பளம் போல நொறுங்கிய சம்பவம்… 4 வயது சிறுவன் பலி.. சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய போது சோகம்..!!
Author: Babu Lakshmanan27 May 2022, 10:19 am
கோவை மதுக்கரை அருகே நெடுஞ்சாலையில் கார் மீது ஈச்சர் வேன் மோதிய விபத்தில் 4 வயது சிறுவன் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வீரபாண்டி அடுத்த பிரஸ் காலணியை சேர்ந்தவர் அமல் சிமோன், இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இன்று இவரது தந்தை செல்வராஜ் (65), தனது பேரக் குழந்தைகளான, நித்தின் ஆபிகாம் (12), கல்வின் கார்ல்சன் (9), யுவன் கிரிசின் (4) ஆகிய மூன்று பேருடன் கோடை விடுமுறையை கொண்டாட கேரளா மாநிலத்தில் உள்ள மலம்புழா அணைக்கு காலை சென்றுள்ளார்.

பின்னர், மாலை மீண்டும் கோவைக்கு காரில் வந்துள்ளனர். அப்போது, சேலம் – கொச்சின் சாலை மதுக்கரை பாலத்துறை சந்திப்பு அருகே வந்த போது, பின்னால் அதிவேகமாக வந்த ஈச்சர் வாகனம் செல்வராஜ் வந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இதில், கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே கேரளா நோக்கிச் சென்ற டிப்பர் லாரி மீது மோதி நின்றது, இதில், காரில் இருந்த நான்கு பேரும் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, அங்கிருந்தவர்கள் 4 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமல் சிமோன் மகன் யுவான் கிரிசின் (4) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற ஈச்சர் வேன் ஓட்டுநர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.