கேடிஎம் பைக்கை திருட புல்லட்டில் வந்த கொள்ளையர்கள் : ஆண்கள் விடுதியில் இரண்டு பைக்குகள் அபேஸ்.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!
Author: Udayachandran RadhaKrishnan27 May 2022, 5:37 pm
கோவை : கேசுவலாக கே டி எம் பைக், ஆக்டிவாவை திருடிய மர்ம நபர்கள் புல்லட்டில் வந்து வாகனங்களை கொள்ளையடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பார்க்ஸ் பகுதி அஸ்வினி காம்ப்ளக்ஸ்ல் இயங்கி வரும் ஆண்கள் விடுதியில் தங்கி ஏராளமானோர் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக இந்த காம்ப்ளக்ஸில் குடியேறிய தஞ்சாவூரைச் சேர்ந்த ரகுவரன் லாட்ஜில் தங்கி இருக்கின்றார்.
இவர் அறைக்கு பக்கத்து அறையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் மற்றொரு நபரும் தங்கி இருக்கின்றார். இந்நிலையில் இவர்களுக்கான இருசக்கர வாகன பார்க்கிங் காம்ப்ளக்சில் உள்ள பகுதியிலேயே இருக்கின்றன.
காம்பளக்ஸ் வளாகத்தில் பார்க்கிங் செய்துவிட்டு பின்னர் தங்கும் விடுதிக்கு சென்ற இவர்கள் காலை வந்து பார்த்த போது அவர்களின் பைக் காணாமல் போய் இருப்பதை அறிந்தனர்.
புல்லட்டில் வந்த மர்ம நபர்கள் 4 பேர் அஸ்வினி லாட்ஜின் வெளிபுறத்தில் வண்டியை நிறுத்திவிட்டு கேஷுவலாக வளாகத்தின் உள்ளே வந்து கேடிஎம் பைக் மற்றும் ஆக்டிவாவினை திருடிச் சென்றிருக்கின்றனர்.
இதுகுறித்து காட்டூர் காவல் நிலையத்தில் ரகுவரன் புகார் தந்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் சிசிடிவியை கைப்பற்றிய போலீசார் பைக் திருடர்களை பிடிக்க தீவிரமாக முனைப்பு காட்டி கொண்டிருக்கின்றனர்.
வளாகத்தின் உட்புற பகுதியிலிருந்து வெளியான சிசிடிவியில் இயல்பாக உட்புற வளாகத்திற்குள் வந்து திருடர்கள் இருசக்கர வாகனத்தை திருடி செல்கின்றனர். இரண்டு பைக்குகள் ஒரே நேரத்தில் களவாடிய நிலையில் இது குறித்து மேற்கொண்ட விசாரணையில் கடந்த ஒரு மாத இடைவெளியில் சுமார் ஐந்து பைக்குகள் இந்த பகுதியில் காணாமல் போயிருப்பது தெரிய வந்தன.
தொடர்ந்து பைக்கை திருடும் மர்ம நபர்கள் யார் என்பது குறித்து காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் இரவு நேர ரோந்தை தீவிரப்படுத்த வேண்டிய தேவையும் ஏற்பட்டிருக்கின்றன. களவாடிய இரண்டு பைக்குகளின் மதிப்பு மூன்று கட்சம் ஆகும்.