எங்க கட்சி கொடி ஊன்ற யார் கிட்ட அனுமதி வாங்கணும் : போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 May 2022, 10:55 am

திண்டுக்கல் : பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கொடிகளை ஊன்றுவது தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் போலீசாருக்கும்‌ இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர கமிட்டி சார்பில் புதியதாக கட்சி அலுவலகம் கட்டப்பட்டு திறப்புவிழா நடைபெறவுள்ளது.

பழனி படிப்பாறை காளியம்மன் கோயில் அருகே கட்டப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு திறந்து வைக்கிறார்.

இதற்காக பழனி வரும் பாலகிருஷ்ணனை வரவேற்கும் விதமாக பழனி நகர் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிகள் ஊன்றப்பட்டுள்ளது.

இதன்படி பழனி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கட்சி அலுவலகம் வரையிலான சாலையில் கொடிக்கம்பம் நடப்பட்டது.இதற்கு போலீசார் ஆட்சேபனை தெரிவித்து சாலையின் நடுவே ஊன்றவேண்டாம் என தடுத்தனர்.

இதனால் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே பேருந்து நிலையம் முன்பு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் கூறியதையும் மீறி கொடிக் கம்பம் நடப்பட்டதால் இருபதிற்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

நள்ளிரவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

  • national award missed for paradesi movie because of bala video தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?