திமுகவை அப்செட் ஆக்கிய ‘நீட்’ மாணவர்கள் : 30 ஆயிரம் பேர் அதிகரிப்பு!
Author: Udayachandran RadhaKrishnan29 May 2022, 6:29 pm
தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்த மாணவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நீட் தேர்வு கூடாது என்று போராடி வரும் திமுக, விசிக உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு இது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது என்றே கூறவேண்டும்!
நீட் கட்டாயம்
நமது நாட்டில் மருத்துவ படிப்புகளில் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான ‘நீட்’ தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் ஆகும். இதையடுத்து இந்த ஆண்டு மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு ஜூலை 17-ந்தேதி நடத்தப்படுகிறது.
இத் தேர்வை எழுத இந்தியா முழுவதும் மொத்தம் 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 10.64 லட்சம் பேர் ஆண்கள். 8.07 லட்சம் பேர் பெண்கள். மூன்றாம் பாலினத்தவர் 12 பேர் ஆவர். மொத்தம் 1.69 லட்சம் மருத்துவ இடங்களுக்கு அவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
தமிழகத்தில் அதிகரித்த நீட் தேர்வர்கள்
தமிழகத்தில் மட்டும் இந்த ஆண்டு நீட் தேர்வை எழுத 1 லட்சத்து 42 ஆயிரத்து 286 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். இது சென்ற ஆண்டை விட, 30 ஆயிரம் அதிகம். தவிர நீட் தேர்வை தமிழில் எழுத 31 ஆயிரத்து 803 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இதில் இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால் இந்த ஆண்டு நீட் தேர்வை தமிழில் எழுதுவதற்கு விண்ணப்பித்து இருப்பவர்களின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்து இருப்பதுதான். கடந்த 5 ஆண்டுகளாக நீட் தேர்வு 12 இந்திய மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த அத்தனை மொழிகளிலும் நீட் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை 274.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.
திமுக அரசுக்கு மாணவர்கள் பதிலடி
இந்த செய்தியை சுட்டிக் காண்பித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறும்போது, “நீட் தேர்வுக்கு அதிகளவு விண்ணப்பித்து, முதலமைச்சரின் நீட் தேர்வு விலக்கு குறித்த கோரிக்கைக்கு தமிழக மாணவர்கள் பதிலளித்துள்ளனர். திமுக, அரசு நடத்தும் அற்ப அரசியலுக்கு தமிழக மாணவர்களிடம் நேரமில்லை” என்று குறிப்பிட்டு உள்ளார்.
கல்வியாளர்கள் தெரிவிக்கும் கருத்துகளாவது : நீட் தேர்வை அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் எழுதுவது மிக கடினம் என்றும் அவர்கள் தனியார் பயிற்சி மையங்களை நோக்கி செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது. அவர்களால் பல லட்ச ரூபாய் செலவு செய்து நீட் தேர்வுக்கு படிக்க முடியாது என்ற வாதமும் தமிழகத்தில் பல அரசியல் கட்சிகளால் தொடர்ந்து முன் வைக்கப்படுகிறது.
நீட் தற்கொலை
இதன் காரணமாக தமிழகத்தில் 2017 முதல் இதுவரை 16 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு இருப்பதாகவும் கூறுகின்றனர்.
அதனால்தான், நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க வேண்டும் என்று சட்டப் பேரவையில் திமுக அரசு கடந்த பிப்ரவரி 8-ம்தேதி இரண்டாவது முறையாக சட்ட மசோதாவை நிறைவேற்றி ஆளுநர் ரவிக்கு அனுப்பி வைத்தது. அதை அவர் இரண்டு மாதங்கள் கிடப்பில் போட்டதால் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று நெருக்கடியும் கொடுத்தது. இதையடுத்து அவரும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது இதுவரை தெரியவில்லை. எனினும் இந்தாண்டு நீட் தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிய வருகிறது.
மதிப்பெண் அடிப்படையில் என்றால், ஒரு சீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் வசூலிக்கும் திறன் தனியார் மருத்துவக் கல்லூரி நடத்துபவர்களில் பலருக்கு உண்டு. ஆனால் நீட்டில் தேர்ச்சி பெற்றால் அரசு நிர்ணயிக்கும் கட்டணம் மட்டுமே பெற முடியும். தவிர நீட் விலக்கில் படித்தால் எதிர் காலத்தில் பிற மாநிலங்கள், நாடுகள் தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பை அங்கீகரிக்க மறுக்கலாம். ஒரு பிரச்சினைக்கு பல தீர்வுகள் கூட்டாட்சிக்கு உதவாது. மாணவர்களின் இந்த தெளிவு தான் தமிழகத்தில் நீட் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு முக்கிய காரணம்.
2021ல் ஆர்வம் காட்டாத மாணவர்கள்
தமிழகத்தில் 2020-ம் ஆண்டு நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள்
1 லட்சத்து 21 ஆயிரத்து 617 பேர். ஆனால் 2021-ல் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவ- மாணவிகள் எண்ணிக்கை 1 லட்சத்து12 ஆயிரத்து 890 என்பது உண்மைதான்.
கடந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை குறைந்ததற்கு திமுக அரசின் குழப்ப நிலையே காரணம்.
திமுக அரசை எதிர்பார்த்த மாணவர்கள்
திமுக தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை நீக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்து இருந்தது. அந்த வகையில் திமுக ஆட்சி ஏற்பட்டதை அடுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பில் பல ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகவில்லை என்றும் ஆனால் கடைசி நேரத்தில் திடீரென நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எப்படியாவது விலக்கு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையால்தான் கடந்த வருடம் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் அத்தேர்வுக்கு விண்ணப்பிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. இது வரவேற்கத்தக்க நல்ல மாற்றம் தான்” என்று அந்தக் கல்வியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
திமுகவுக்கு பின்னடைவு
“நீட் தேர்வை இந்த ஆண்டு 30 ஆயிரம் பேருக்கு மேற்பட்ட தமிழக மாணவர்கள் கூடுதலாக எழுதுவது திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் பெரும் பின்னடைவுதான்” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
“2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக தலைவர் ஸ்டாலின், மகளிரணி செயலாளர் கனிமொழி, இளைஞரணி செயலாளர் உதயநிதி மூவரும் நீட் தேர்வைத்தான் முக்கிய பிரச்சனையாக பிரசார மேடைகளில் பேசினர். அதுவும் உதயநிதியோ இன்னும் ஒரு படி மேலே போய் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. திமுக ஆட்சியின் முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து செய்வதன் மீதாகத்தான் இருக்கும்” என பரபரப்பு காட்டினார்.
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டாகியும் நீட்தேர்வுக்கு விலக்கு கிடைக்கவில்லை. மாறாக அரசு விழாவில் அது பற்றி பிரதமர் மோடியிடம் கெஞ்சி கேட்கும் நிலைமை வந்துவிட்டது. 2017-ல் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அமர்வு நீட் தேர்வு செல்லும் என்று தீர்ப்பு அளித்து இருப்பதால் அதை புரிந்து கொண்டாவது இனி வரும் ஆண்டுகளில் தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களை நீட் தேர்வுக்கு திமுக அரசு தயார்படுத்த வேண்டும்.
திமுக அரசு முயற்சி செய்யுமா?
மேலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான முந்தைய அதிமுக அரசு கொண்டு வந்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை தொடர்ந்து பின்பற்றி அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை, விளிம்பு நிலை மாணவர்களை மருத்துவர்களாக்கும் திட்டம்தான் சிறந்தது.
ஏனென்றால் அச்சட்டத்தின் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆயிரம் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகி இருக்கிறது. அதை 10 சதவீதமாக உயர்த்த திமுக அரசு சட்ட ரீதியாக முயற்சி மேற்கொண்டால் நன்றாக இருக்கும்” என்று அவர்கள் அட்வைஸ் செய்தனர்.