ஆட்டோவில் தவறவிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான நகைகள்… ஒரே மணிநேரத்தில் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த போலீஸார்..!!
Author: Babu Lakshmanan31 May 2022, 10:56 am
புதுச்சேரியில் பெண் ஒருவர் ஆட்டோவில் தவறவிட்ட 1 லட்சம் ரூபாய் மதிப்பிளான வைரம், பிளாட்டினம் பையை ஒருமணி நேரத்தில் போலீஸார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் மதுமாயி பசாக் (30), திருமணமாகாத இவர் தனது பெற்றோருடன் புதுச்சேரி வந்தார். ஆசிரம பக்தர்களான இவர்கள், புதுச்சேரி குருசுக்குப்பத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். கடந்த வாரம் பெங்களுருவிற்கு சென்றுவிட்டு நேற்று புதுவை திரும்பியுள்ளார்.
அப்போது பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோ பிடித்து வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டுக்கு சென்ற பிறகு, தான் கொண்டு வந்திருந்த பைகளில் 1 பை காணாமல் போய் இருப்பதும், அந்த பையில் தான் வைரம், பிளாட்டினம் உள்ளிட்ட ரூ. 1 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள நகைகளை வைத்து இருப்பதும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, இது குறித்து அவர் உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஆய்வாளர் பாபுஜி தலைமையிலான போலீஸார் உடனே விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, சுமார் ஒரு மணி நேரத்தில் அவர் பயணித்த ஆட்டோ கண்டுபிடிக்கப்பட்டு அதில் இருந்த பை பத்திரமாக மீட்கப்பட்டு மதுமாயியிடம் ஒப்படைக்கப்பட்டது.