தர்மசங்கடப் படுத்தாதீங்க.. தயவு செய்து நெருக்கடி கொடுக்காதீங்க… அமைச்சர் பதவி குறித்து தடலாடியாக அறிக்கை வெளியிட்ட உதயநிதி..!!

Author: Babu Lakshmanan
31 May 2022, 2:04 pm

அமைச்சர் பதவி வழங்கக்கோரி திருச்சி மேற்கு மாவட்ட திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற கழக செயல்வீரர்கள் கூட்டங்களில் எனக்கு அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைத்திருப்பது குறித்து அறிந்தேன். என் தொடர் பணிகள் மீதும், முன்னெடுப்புகள் மீதும் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், அன்பிற்கும் நான் என்றென்றும் நன்றிக்குரியவனாக இருப்பேன்.

கழகம் வழங்கிய வாய்ப்பில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகத் தொகுதி மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து, அதற்குரிய தீர்வுகளுக்கான மக்கள் பணியையும், கழகத் தலைவர் மற்றும் கழக முன்னோடிகளின் வழிகாட்டுதலில் கழக இளைஞர் அணியின் செயலாளராக தமிழகம் முழுவதும் பயணித்து, கழகப் பணியையும் என்னால் இயன்றவரைச் சிறப்பாக ஆற்றி வருகிறேன்.

கழகத்தை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க அடுத்தகட்ட திட்டமிடல்களுடன் பாசறைக் கூட்டங்கள் நடத்துவது, நலத்திட்ட பணிகளில் ஈடுபடுவதென பலவற்றுக்குமான பயணங்களுக்குத் தயாராகி வருகிறேன்.

இந்தச் சூழலில், என்மீதுள்ள அன்பின் காரணமாக, எனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாமென உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். எந்தச் சூழலில் எந்த முடிவை எடுக்க வேண்டும் என்பதை கழகமும், தலைமையும் நன்கறியும் என்பதை கழக உடன்பிறப்புகள் நாம் அனைவரும் அறிவோம்.

எனவே, பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் அவர்களின் வழியில் வந்த நம் கழகத் தலைவர் அவர்கள் வழங்கும் கட்டளையின் வழியில் நின்று கழகத்தை வளர்த்தெடுக்க நாளும் தொடர்ந்து உழைத்திடுவோம். மக்கள் பணியாற்றிடுவோம். கழகத்துக்கும் கழக அரசுக்கும் மகத்தான புகழைச் சேர்த்திடுவோம், என்று தெரிவித்துள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ