கப்பல் படைக்கு தலைமை ஏற்கும் படுகர் இனப்பெண் : பயிற்சி முடிந்து ஊர் திரும்பியவரை வாழ்த்து மழையில் நனைய வைத்த மலைவாழ் மக்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
31 May 2022, 10:05 pm

நீலகிரி : படுகர் சமுதாயத்தில் இருந்து கப்பல் படையில் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள மீராவுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

நீலகிரி மாவட்டம், உதகை அருகே கேத்தி கிராமத்தில் உள்ள அச்சனக்கல் பகுதியைச் சோ்ந்தவா் ரவீந்திரநாத். இவரது மனைவி மாலதி. இவர்களது மகள் மீரா (வயது23). ரவீந்திரநாத் ராணுவ மருத்துவமனையில் தொழில்நுட்ப நிபுணராக நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ மருத்துவமனை மட்டுமின்றி நாட்டின் பல்வேறு ராணுவ மருத்துவமனைகளில் பணியாற்றியுள்ளாா்.

இதன் காரணமாக இவரது மகள் மீராவை தனது பணி மாறுதல் செல்லும் ஊா்களுக்கு எல்லாம் அழைத்துச்சென்று அங்குள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலேயே படிக்க வைத்துள்ளாா்.

இவா் கோவையில் பணிபுரிந்தபோது தனது மகள் மீராவை அங்குள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் படிக்க வைத்தார். இந்நிலையில், மீராவுக்கு இந்திய ராணுவத்தில் சோ்ந்து பணியாற்ற வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டது.

இதற்காக அவர் கடந்த ஆண்டு நடந்த ஒருங்கிணைந்த ராணுவப் பணிகளுக்கான தோ்வினை எழுதினார். அதில் மீரா கப்பல் படைக்கான பிரிவில் தோ்ச்சி பெற்றாா். இதைத் தொடா்ந்து, மீராவுக்கு கேரள மாநிலம் கண்ணூா் அருகே உள்ள எஜிமாலா கப்பல் படைத் தளத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. 6 மாதம் பயிற்சியில் பங்கேற்றார்.

பயிற்சிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் மீரா விரைவில் கப்பல் படைக்கு அதிகாரியாக தலைமை ஏற்க உள்ளார். பயிற்சியை முடித்த அவர் நேற்று தனது பெற்றோருடன், தனது சொந்த ஊரான நீலகிரியில் உள்ள அச்சனக்கல்லுக்கு வந்தாா்.

அங்கு அவருக்கு அந்த ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். முன்னாள் ராணுவ வீரர்கள் அமைப்பு சார்பில் இவருக்கு பாராட்டு விழா நடந்தது. இதனிடையே இன்று மாலை தனது கிராமத்தில் தனது தாய் தந்தை மீராவுக்கு இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது மீரா தனது கிராமத்தில் உள்ள வயதான பாட்டியிடம் ஆசீர்வாதம் பெற்று மகிழ்ந்தார்.

இதுகுறித்து மீரா கூறியதாவது:- எனது தந்தை ராணுவத்தில், பணியாற்றியதால் எனக்கும் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை சிறுவயதிலேயே இருந்தது. அதற்கேற்ப கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் இந்தியை முதன்மையான மொழியாக கொண்டு படித்ததால் எனக்கான பயிற்சிகள் எளிமையானது.

தற்போது கண்ணூரில் உள்ள தேசிய கப்பல்படை பயிற்சி மையத்தில் 6 மாத பயிற்சியை முடித்துள்ளேன். இதை தொடர்ந்து சப்-லெப்டினென்ட் என்ற கப்பல் படை அதிகாரி பதவி வழங்கப்பட்டு கொச்சியில் உள்ள கப்பல்படை தளத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

ராணுவ பணி என்றாலே அதில் பெண்களுக்கு அதிகளவில் விருப்பம் இருக்காது என்பதும், குறிப்பாக நீலகிரி போன்ற மலை மாவட்டங்களை சேர்ந்த பெண்களுக்கு வாய்ப்புகள் அதிகளவில் இருக்காது என்பதையெல்லாம் தகர்த்து படுகர் சமுதாயத்தில் இருந்து கப்பல் படையில் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

படுகர் சமுதாயத்தில் இருந்து கப்பல் படையில் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள மீராவுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ