பிளாஸ்டிக் பயன்படுத்த தடை : திருப்பதியில் கடும் சோதனை.. அணிவகுத்த வாகனங்கள்.. தரிசனத்திற்கு மேலும் தாமதமாகும் சூழல்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 June 2022, 1:35 pm

ஆந்திரா : திருப்பதி மலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தேவஸ்தானம் முழுமையாக தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து அலிபிரி சோதனை சாவடியில் சோதனை நடைபெற்று வருவதால் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ள திருமலையில் இன்று முதல் முழுமையாக பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தடை செய்து நேற்று அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து திருப்பதியில் அமைந்துள்ள சோதனை சாவடியில் வாகனங்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

திருப்பதி மலையில் பிளாஸ்டிக் பொருட்களை 2018 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி முதல் தடை செய்வதாக தேவஸ்தானம் அறிவித்து படிப்படியாக பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதித்து வருகிறது.

முன்னதாக பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் கைப்பை ஆகியவற்றை தடைசெய்த தேவஸ்தான நிர்வாகம் பக்தர்கள் குடிநீர் தேவைக்காக திருமலையில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் சுத்தகரிப்பு இயந்திரங்களை நிறுவி இலவசமாக “ஜல பிரசாதம்” என்ற பெயரில் குடிநீர் வழங்கி வருகிறது.

இந்நிலையில் நேற்று திருப்பதி மலையில் முழுமையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடைவிதித்து தேவஸ்தான நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.

இதன் காரணமாக பிளாஸ்டிக் பொருட்களை திருமலைக்கு கொண்டு செல்வது தடுக்கும் பொருட்டு திருப்பதியில் உள்ள அலிபிரி சோதனைச்சாவடியில் வாகனங்கள் முழுமையாக தேவஸ்தான ஊழியர்களால் சோதனை செய்யப்படுகிறது.

பக்தர்கள் கொண்டுவரும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் உட்பட அனைத்து பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்த பின்னரே பக்தர்களை திருமலைக்கு அனுமதிக்கின்றனர்.

பலத்த சோதனை காரணமாக அலிபிரி சோதனை சாவடியில் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

வார விடுமுறை நாட்களில் திருப்பதியில் தொடர்ந்து அதிக பக்தர்கள் குவிந்து வரும் நிலையில் இதே நிலை தொடர்ந்தால் பக்தர்கள் தீவிர சிரமத்திற்கு உள்ளாக நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Ajith Vidamuyarchi Trailer Release Update விடாமுயற்சி ட்ரைலர் ரெடி : அப்போ ரிலீஸ் தேதி…இருங்க பாய்..நாளைக்கு ஒரு வெயிட்டான சம்பவம் இருக்கு..!