23வது ஓவரின் போது இங்., – நியூசிலாந்து டெஸ்ட் போட்டி நிறுத்தம்.. திடீரென இரு அணி வீரர்களும் செய்த செயல்… நெகிழ்ந்து போன ரசிகர்கள்..!! (வீடியோ)
Author: Babu Lakshmanan3 June 2022, 10:53 am
இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் போது வீரர்கள் செய்த செயல் கிரிக்கெட் ரசிகர்களிடையே நெகிர்ச்சியை ஏற்படுத்தியது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது.
இதில், முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி வெறும் 132 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக டி கிராண்ட்ஹோம் மட்டும் 42 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் மேட்டி பாட்ஸ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளும், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதனை அடுத்து இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.
இதனிடையே, இப்போட்டியில் மறைந்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னேவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. வார்னே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 23ம் நம்பர் எண் கொண்ட ஜெர்சியை அணிந்திருந்தார்.
எனவே, அவரை கவுரவிக்கும் விதமாக, ஆட்டத்தின் 23வது ஓவர் முடிந்ததும்,
இரு அணி வீரர்களும் திடீரென வரிசையாக நின்றனர். உடனே மைதானத்தில் இருந்த பார்வையாளர்களும் நின்று, 23 விநாடிகள் கைத் தட்டி தங்களது அஞ்சலியை செலுத்தினர். அப்போது ஷேன் வார்னே குறித்த வீடியோ டிவியில் ஒளிபரப்பப்பட்டது.
ஷேன் வார்னே கடந்த மார்ச் மாதம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.