தமிழகத்திற்கு 2 தலைமை செயலகம் தேவை : ஒன்னு சென்னையில் இருக்கட்டும்… மற்றொன்று..? தமிழக அரசுக்கு கார்த்தி சிதம்பரம் யோசனை

Author: Babu Lakshmanan
4 June 2022, 5:00 pm

தமிழகத்திற்கு இரு தலைமை செயலகங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

போதிய இடவசதியின்மை மற்றும் வாடகை கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சென்னை ஜார்ஜ் கோட்டைக்கு பதிலாக, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகத்தை பெரும் பொருட்செலவில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி கட்டினார்.

ஆனால், அதிமுக ஆட்சியில் அந்தக் கட்டிடத்தை முதலமைச்சர் ஜெயலலிதா, அரசு மருத்துவமனையாக மாற்றினார். இதனால் மீண்டும் தலைமைச் செயலகம் ஜார்ஜ் கோட்டையிலேயே இயங்கியது. இதனிடையே, 10 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், தலைமை செயலகம் தொடர்பான பலகை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மீண்டும் நிறுவப்பட்டது. இதனால், தலைமை செயலகம் மீண்டும் இடம் மாறுகிறதா..? என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையிவ் புதிய தலைமைச் செயலகம் ஒன்றை அமைக்க வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

அதில், 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக அரசின் தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவையும் இயங்கி வருகிறது. தற்போது இந்த புனித ஜார்ஜ் கோட்டையானது மிகவும் பழைய கட்டிடமாகவும் மற்றும் இட வசதி இல்லாமலும் நவீன வசதிகள் இல்லாமலும் செயல்பட்டு வருகிறது.

எனவே, புதிதாகவும் இட வசதியுடன் நவீன தொழில்நுட்பத்துடன் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய தமிழகத்தின் அடையாளமாக புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்தினை கட்ட வேண்டும். கூடுதலாக ஒரு சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்தை தமிழகத்தின் மையமான திருச்சியில் அமைத்திட வேண்டும். சட்டப்பேரவை நிகழ்வுகளை சென்னையிலும், திருச்சியிலும் மாற்றி மாற்றி நடத்திட வேண்டும்.

மேலும், தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் சென்னையில் மட்டும் நடத்திடாமல் மற்ற ஊர்களிலும் நடத்த வேண்டும் என தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.

  • no individual is bigger than the sport tweet by vishnu vishal கிரிக்கெட்டை விட தனிநபர் பெரியவர் அல்ல- CSK அணியை விளாசிய விஷ்ணு விஷால்