3 அமைச்சர்களுக்கு சிக்கல்… ரூ.100 கோடி ஊழல் புகார்… அண்ணாமலை வெளியிட்ட வீடியோ ஆதாரம்…!!

Author: Babu Lakshmanan
7 June 2022, 4:28 pm

சென்னை : திமுக அமைச்சர்கள் 3 பேர் ஊழல் செய்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆதாரத்தோடு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் மீது பாஜக மாநில தலைவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். பொங்கல் பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்ததில் ஊழல், மின்சாரத்துறையில் ஒப்பந்தம் ஒதுக்கியதில் ஊழல், போக்குவரத்து ஊழியர்களுக்கு இனிப்பு வாங்கியதில் ஊழல் என அடுத்தடுத்து பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறி, தமிழகத்தை பரபரப்பிற்குள்ளாக்கி வருகிறார்.

அண்மையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கச் சொல்லி கோட்டையை முற்றுகையிட்டு தமிழக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார். இதனிடையே, தமிழக அரசின் இரு துறைகளில் ஊழல் தலைவிரித்தாடுவதாகவும், அதனை வெளியிடப்போவதாகவும் கூறினார். இந்த அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து அமைச்சர்கள் சிலர் தொடர்பு கொண்டு பேசியதாகவும் கூறி அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தினார்.

அவர் கூறியபடியே, கடந்த 5ம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, கர்ப்பிணிகள் ஊட்டச்சத்து திட்டத்திற்காக ஹெல்த் மிக்ஸ் வாங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், தலைமையின் குடும்பத்தின் தலையீடே இதற்கு காரணம் என்று பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார் அண்ணாமலை.

அதேபோல, கட்டுமான திட்டங்கள் அனைத்து ஜீ – ஸ்கொயர் நிறுவனத்திற்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும், அதிலும் முறைகேடு நடந்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், திமுக அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஆதாரத்துடன் கூடிய வீடியோவை அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், மக்களை முட்டாள்களாக்க வேண்டும் என்றும், பொங்கல் தொகுப்பில் ஊழல் செய்த நிறுவனத்திற்கு மீண்டும் டெண்டரில் பங்கேற்க அனுமதித்தது ஏன்..? என்றும், கருப்பு பட்டியலில் அனிதா டெக்ஸ்கார்ட் நிறுவனத்தை சேர்ப்பதாக சொல்லிவிட்டு, அதனை செய்யாதது ஏன்..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோல, கர்ப்பிணிகளுக்கான ஹெல்த் மிக்ஸை வழங்க ஆவின் நிறுவனம் தயாராக இருந்தும், அதனை புறக்கணித்தது ஏன்..? என்று ஆதாரத்துடன் வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும், இரு நபர்கள் நிர்பந்தத்தின் பேரில் டெண்டரை மாற்றியது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாரையோ ஒருவரை காப்பாற்றுவதற்காக ஆவினை ஏன் கேவலப்படுத்த வேண்டும் என்றும், அமைச்சர் ஏன் பொய் சொல்ல வேண்டும்..? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 760

    0

    0