அடுத்தாண்டு திமுக ஆட்சி இருக்குமானு பார்க்கலாம்.. செய்த தப்புக்கு தண்டனை கண்டிப்பா கிடைக்கும்… எடப்பாடி பழனிசாமி அதிரடி..!!
Author: Babu Lakshmanan10 June 2022, 4:24 pm
மயிலாடுதுறை : தமிழகத்தில் அடுத்தாண்டு திமுக ஆட்சி இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதினம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து ஆசிபெற்றார்.
அப்போது, அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது :- மதம் மற்றும் கோவில் சம்பந்தமான விஷயங்கள் குறித்து முழு விபரம் தெரிந்த பிறகுதான் கூற முடியும். அனைத்து மதங்களையும் சமமாக நடத்த வேண்டும். பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் கால வழிமுறைகள் மற்றும் கோவில் வழிமுறைகளில் அரசு தலையிடக் கூடாது.
ஆதீன விவகாரங்களில் மூக்கை நுழைக்க இந்த அரசு முயற்சிக்கிறது. 500 ஆண்டுகாலமாக பட்டணபிரவேசம் நிகழ்ச்சி நடந்தது. ஆனால், அதற்கு திமுக அரசு தடை விதித்தது. பல்வேறு அரசியல் கட்சிகளும், மக்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழக அரசு இறங்கிவந்து அனுமதி கொடுத்தது.
மாற்று ஏற்பாடுகள் செய்வதாக கூறும் திமுக அரசின் ஆட்சி அடுத்த ஆண்டு இருக்கிறதா..? என்பதை பார்க்கலாம். ஆண்டவன் என ஒருவன் இருக்கிறான். தவறு செய்பவர்களுக்கு கண்டிப்பாக அதற்கான பதிலடி கிடைக்கும். திமுக அரசு எதைபற்றியும் கவலைப்படவில்லை. குடும்பம் செழிக்க வேண்டும். எந்தெந்த துறையில் வருமானம் வரும் என்று பார்க்கின்றனர்.
மக்களை பற்றியும், விவசாயிகள் பற்றியும் சிந்திக்கவில்லை. சசிகலா அதிமுக.,வில் உறுப்பினர் இல்லை. அவருக்கும், அதிமுக.,விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, எனக் கூறினார்.