புரோட்டா கேட்டு ஓட்டலை சூறையாடிய திமுக கவுன்சிலரின் அக்கா மகன் : பெட்ரோல் ஊற்றி கடையை கொளுத்தி விடுவதாக மிரட்டல்… கதறும் உரிமையாளர்!!
Author: Udayachandran RadhaKrishnan13 June 2022, 7:44 pm
திமுக கவுன்சிலரின் அக்கா மகன் புரோட்டா கேட்டு கொடுக்காத ஓட்டலை அடித்து நொறுக்கிய சம்பவம் காஞ்சிபுரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 50 வது வார்டு பல்லவன் நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவருடைய மனைவி பாண்டிய லக்ஷ்மி. இவர்கள் கடந்த 10 தினங்களுக்கு முன்பு பல்லவன் நகர் பகுதியில் மதுரை ஸ்ரீ முனியாண்டி விலாஸ் என்ற ஓட்டலை துவக்கி நடத்தி வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு, எஸ்பி மற்றும் காவல்துறை தலைவர் குடியிருப்பு பகுதியிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் இவர்களுடைய அசைவ உணவகம் இயங்கி வருகின்றது.
ஹோட்டல் துவக்கியதில் இருந்து இவர் கடைக்கு சஞ்சீவி காந்தி (வயது 25) என்ற நபர் தினந்தோறும் வந்து இல்லாத ஐட்டங்களை கேட்டு வேண்டுமென்றே தகராறு செய்து வருகின்றார் எனக்கு தெரிய வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் பாண்டியனின் ஓட்டலுக்கு வந்த சஞ்சீவி காந்தி உடனே பரோட்டா வேண்டும் என கேட்டுள்ளார். மது போதையில் இருந்த சஞ்சீவி காந்தியை பார்த்து அச்சமுற்ற பாண்டியன் பரோட்டா தயார் செய்ய காலதாமதமாகும் என கூறியதால் ஆவேசமடைந்த சஞ்சீவி அங்கு வைத்திருந்த பரோட்டா பாத்திரத்தை எடுத்து ஓட்டலின் உள்ளே வீசி தகராறில் ஈடுபட்டார்.
அதுமட்டுமல்லாமல் பரோட்டா மாஸ்டர் ராமசந்திரன் என்பவரை செங்கல் எடுத்தும் தாக்கியுள்ளார். இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.
அங்கிருந்து சென்ற சஞ்சீவி 7க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களை அழைத்துக் கொண்டு வந்து மீண்டும் ஓட்டலில் கலாட்டா செய்து அங்கிருந்த உணவு அயிட்டங்களை எடுத்து கீழே வீசி, எரிந்து கொண்டிருந்த அடுப்பினை சாய்த்து , மேஜைகளை அடித்து நொறுக்கி உள்ளார்கள்.
மேலும் கல்லாப் பெட்டியை உடைத்து அதிலிருந்து சுமார் ஐந்தாயிரம் ரூபாய் பணம் எடுத்துக் கொண்டு சென்றாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாண்டியன் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து நள்ளிரவு 12.30 மணி அளவில் காவல்துறையினர் நேரில் வந்து விசாரணை செய்தனர்.
மேலும் மது போதையில் இருந்த சஞ்சீவியை பிடித்து எச்சரித்து காலையில் காவல் நிலையத்திற்கு வருமாறு கூறி அனுப்பி விட்டனர். இன்று காலையில் சுமார் 9.00 மணி அளவில் மீண்டும் பத்து ஆட்களுடன் வந்த சஞ்சீவி , பாண்டியனின் மனைவி பாண்டியலட்சுமியிடம் எங்கிருந்தோ வந்து இங்கு ஓட்டல் நடத்த உனக்கு எவ்வளவு தைரியம் உண்டு, இந்த ஏரியாவில் நான் தான் முக்கியமான நபர், எங்களை எதிர்த்து எவனும் எதுவும் செய்ய முடியாது, நான் திமுக கட்சியை சேர்ந்த கவுன்சிலர் மோகனின் அக்கா மகன், நான் சொல்வதைக் கேட்காவிட்டால் ஓட்டலை பெட்ரோல் ஊத்தி கொளுத்திவிடுவேன் என எச்சரித்துள்ளார்.
இதனால் மேலும் அச்சமுற்ற பாண்டியன் மீண்டும் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைப்பற்றி நமது செய்தியாளரிடம் பேசவே பயந்த பாண்டியன், நாங்கள் ஹோட்டல் வைத்து நடத்தவே அச்சமாக உள்ளது.
அவ்வப்போது இதேபோல் கலாட்டா செய்கின்றனர். நாங்கள் நிம்மதியாக தொழில் செய்ய முடியவில்லை. எனவே எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும் எங்கள் ஓட்டலை அடித்து நொறுக்கியதால் சுமார் முப்பத்தி ஐந்து ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நஷ்டம் ஏற்பட்டது என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
சஞ்சீவி காந்தியின் அம்மாவும் திமுக கவுன்சிலர் மோகனும் உடன்பிறந்தவர்கள் என்பதால் அவரின் பெயரை பயன்படுத்திக்கொண்டு சஞ்சீவ் காந்தி பல இடங்களில் கட்டப்பஞ்சாயத்து செய்வதும், தகராறில் ஈடுபடுவதும் தொடர்கிறது என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
செவிலிமேடு அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்த சஞ்சீவி காந்தி என்பவர் மீது ஏற்கனவே இரண்டு மணல் கடத்தல் வழக்குகளும் அடிதடி வழக்குகளும் உள்ளதாக தாலுகா காவல் துறையினர் தெரிவித்தனர்.