பள்ளி வகுப்பறையில் ஆசிரியருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் : கேக் ஊட்டிய தலைமை ஆசிரியை… முதன்மை கல்வி அலுவலர் எடுத்த அதிரடி!!
Author: Udayachandran RadhaKrishnan19 June 2022, 11:42 am
கரூர் அருகே பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியரின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் ஊட்டி கொண்டாடிய ஆசியர்கள்.
கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்து பங்களாபுதூரில் உள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை செயல்படும் இந்த பள்ளியில் இந்த கிராமத்தை சுற்றியுள்ள கிராமங்களை சார்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக மணிகண்டன் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு (16.06.2022) அன்று பிறந்தாள். இதனை முன்னிட்டு அப்பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறையில் மாணவ, மாணவிகள் முன்னிலையில் பிறந்த நாள் கேக் வெட்டியுள்ளனர்.
அதில் முதல் கேக் துண்டை அப்பள்ளியின் தலைமை ஆசிரியை, ஆசிரியர் மணிகண்டனுக்கு ஊட்டி விட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
இது போன்ற ஆசிரியர்களின் ஒழுங்கீனமற்ற செயலால் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் நன்மதிப்பை இழந்து வருகிறது.
இந்நிலையில் குளித்தலை மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன், தலைமை ஆசிரியை சித்ராதேவி, ஆசிரியர் மணிகண்டன் ஆகிய இருவரையும் நேற்று (ஜூன் 18ம் தேதி) சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமாரிடம் பேசியபோது, ”பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் முன்பு கேக் வெட்டியுள்ளனர். அதனை இருவரும் ஊட்டிவிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.