தோல்விக்கு விடை தற்கொலை ஆகாது : அரசியல் காரணங்களுக்காக தற்கொலையைப் போற்றுபவர்களின் கருத்தை தள்ளிவிட்டு முன்னேறுங்கள்… அண்ணாமலை அட்வைஸ்!!
Author: Udayachandran RadhaKrishnan21 June 2022, 5:06 pm
தமிழகம் முழுவதும் நடந்து முடிந்த 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான முடிவு நேற்று வெளியாகின. இதில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 மாணவ-மாணவிகள் எழுத பதிவு செய்து இருந்தனர். அவர்களில் 3 லட்சத்து 84 ஆயிரத்து 655 பேர் மாணவர்கள், 4 லட்சத்து 21 ஆயிரத்து 622 பேர் மாணவிகளும் என மொத்தம் 8 லட்சத்து 6 ஆயிரத்து 277 பேர் தேர்வு எழுதினார்கள்.
அந்த வகையில் 31 ஆயிரத்து 44 பேர் தேர்வை எழுதவில்லை. பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதியவர்களில், 7 லட்சத்து 55 ஆயிரத்து 998 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். இதில் மாணவிகள் 4 லட்சத்து 6 ஆயிரத்து 105 பேரும், மாணவர்கள் 3 லட்சத்து 49 ஆயிரத்து 893 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் மாணவர்களைவிட மாணவிகள் 5.36 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 93.76 ஆகும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரையில், 9 லட்சத்து 55 ஆயிரத்து 139 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் 9 லட்சத்து 12 ஆயிரத்து 620 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். 42 ஆயிரத்து 519 பேர் தேர்வு எழுதவில்லை.
பொதுத்தேர்வில் தோல்வி எதிரொலியாக தமிழ்நாட்டில் ஒரேநாளில் 11 பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தற்கொலை செய்து கொண்ட மாணவர்களில் 10 பேர் அரசு பள்ளியை சேர்ந்தவர்கள். தேர்வு தோல்வி எதிரொலியாக 28 பேர் தற்கொலை முயற்சி செய்துள்ளனர். அவர்களில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்கள் 16 பேரும், தனியார் பள்ளி மாணவர்கள் 12 பேரும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர்.
இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வருதத்தை பதிவு செய்துள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியுற்றதால் தற்கொலை என்ற செய்திகள் மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. தோல்விக்கு விடை தற்கொலை ஆகாது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது, அந்த தனித்தன்மையை உணர்ந்து நீங்கள் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
அரசியல் காரணங்களுக்காகத் தற்கொலையைப் போற்றும் சிலரின் கருத்தை பின் தள்ளிவிட்டு நீங்கள் முன்னேறவேண்டும். முயற்சி திருவினையாக்கும்!