“ஹிட்லர் கதிதான் மோடிக்கும்…” : காங். தலைவர் பேச்சால் வெடித்த சர்ச்சை!

Author: Udayachandran RadhaKrishnan
21 June 2022, 6:35 pm

நமது இளைஞர்கள் ராணுவத்தில் ஆர்வமுடன் பணியாற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் காங்கிரஸ் சார்பில் சத்யாகிரக போராட்டம் நடந்தது.

ஹிட்லர் மரணம்தான் மோடிக்கும்

அதில் கலந்துகொண்டு பேசிய ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி தொகுதி முன்னாள் எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான சுபோத் காந்த் சஹாய், மோடியை மிகக் கடுமையாக விமர்சித்தார்.

அது ஒரு நான்காம் தர மேடை பேச்சாளரின் அமில வீச்சு உரை போல அமைந்திருந்ததுதான், இதில் வேதனையான விஷயம்.

தலைகுனிந்த காங்கிரஸ்

குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக காங்கிரஸ் தனிப்பட்ட முறையில் மேற்கொண்ட முயற்சி எதுவும் பலிக்காதது, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகள் கைமாறிய வழக்கில் அமலாக்கத்துறையின் பிடியில் சோனியாவும், ராகுலும் வசமாக சிக்கிக் கொண்டது, 2024 தேர்தலில் பிரதமர் மோடியின் பாஜகவை எதிர்த்து தனித்து நிற்கும் அளவிற்கு தற்போது காங்கிரஸ் வலுவாக இல்லாததும், அதனால் மாநிலக் கட்சிகளிடம் கையேந்தி நிற்க வேண்டிய நிலை உள்ளதும் அதன் காரணமாக 2014, 2019 தேர்தல் முடிவுகள் மாதிரி அமைந்துவிடுமோ? எனபன போன்ற பல்வேறு குழப்பங்களால் பயந்துபோய் அவர் பேசியது போலவே பிரதமர் மோடி மீதான அந்த விமர்சனம் அமைந்துள்ளது.

சரி, காங்கிரஸ் தலைவரான சுபோத் காந்த் சஹாய், அப்படி என்னதான் பேசினார்?…”இது கொள்ளைக்காரர்கள் அரசு. பிரதமர் மோடி ரிங் மாஸ்டர் போல் செயல்படுகிறார். ஜெர்மானிய சர்வாதிகாரி பாத்திரத்தையும் ஏற்றுக்கொண்டுள்ளார். அவர் ஹிட்லரையே மிஞ்சிவிட்டார். ஹிட்லரும் தனது ராணுவத்தில் காக்கி என்ற தனி அமைப்பை உருவாக்கினார். ஹிட்லர் பாதையைப் பின்பற்றினால் அவரது நிலைதான் ஏற்படும். அவரைப்போன்ற மரணம்தான் உங்களுக்கும் நிகழும். இதை நினைவில் வைத்துக் வைத்துக்கொள்ளுங்கள்” என்று கொந்தளித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரின் இந்த பேச்சு, காங்கிரஸ் மேலிடத்தை பலத்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருப்பதுடன், அக்கட்சிக்கு பெருத்த தலைகுனிவையும், ஏற்படுத்தி இருக்கிறது. இப்படி மோடியை சிறுமைப்படுத்தி பேசுவதால், அவருடைய புகழ் இன்னும் மேலோங்கி விடுமோ என்று கருதியோ, என்னவோ சுபோத் காந்த் சஹாயை காங்கிரஸ் கண்டித்தும் உள்ளது.

காங்கிரஸ் கண்டனம்

இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெயராம் ரமேஷ் உடனடியாக கண்டனம் தெரிவித்தார். “பிரதமருக்கு எதிரான தனிப்பட்ட அநாகரீக கருத்துகள் எதையும் காங்கிரஸ் ஆதரிக்காது. அதிலிருந்து விலகியே நிற்கும். அதேநேரம் மக்களுக்கு எதிரான மோடி அரசின் சர்வாதிகார மனப்பான்மையை எதிர்த்து காங்கிரஸ் தொடர்ந்து போராடும்”என்று குறிப்பிட்டார்.

ஆனாலும், மோடிக்கு ஹிட்லர் போல மரணம் ஏற்படும் என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் பேசியதை பாஜக வன்மையாக கண்டித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியை வெளுத்த பாஜக!!

இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி, காங்கிரசை ஒரு வாரு வாரினார்.

“காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் பிரதமரை அவமதித்திருக்கிறார். இது போன்ற வார்த்தைகளை காங்கிரஸ் பயன்படுத்துவது முதல்முறை அல்ல. 50க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் உள்ளன. நரேந்திர மோடியை துண்டு துண்டாக வெட்டுவேன் என்று கூறிய இம்ரான் மசூத்துக்கு ஆதரவாக ராகுல் தேர்தல் பிரச்சாரமும் செய்தார்.

காங்.,க்கு இது புதுசல்ல

காங்கிரஸ் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு எதிராக கேவலமான வார்த்தைப் பிரயோகம் செய்வது புதிய விஷயம் அல்ல. கடந்த 15 ஆண்டுகளாகவே தொடர்ந்து இப்படித்தான் விஷமத்தனமாக பேசி வருகின்றனர்.

அனைவருக்கும் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது 2007-ல் அந்த மாநிலத்தில் நடந்த சட்டப் பேரவை தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா, மோடியை மரண வியாபாரி என்று கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த வார்த்தையால் குஜராத் மக்கள் மிகவும் காயப்பட்டனர். அதனால்தான் தேர்தலில் மோடி அப்போது வரலாறு காணாத வெற்றி பெற்றார். மக்கள் அவர் மீது அன்பு வைத்திருப்பதால்தான் தொடர்ச்சியாக அவரை பிரதமராகவும் வெற்றி பெறச்செய்து வருகின்றனர். இதனால் காங்கிரஸ் விரக்தி அடைந்திருக்கிறது. 136 ஆண்டுகால கட்சியான காங்கிரஸ், எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது மிகவும் பலவீனமாக உள்ளது. அந்தக் கோபம்தான் காங்கிரஸ் தலைவர்களின் பேச்சில் வெளிப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் மோடி என்பதால் அவரைக் குறிவைத்து இதுபோல் தரக்குறைவாக பேசுகின்றனர். “என்று அவர் கண்டித்தார்.

விரக்தியில் காங்கிரஸ்

இதேபோல் பாஜக தலைவர்களில் ஒருவரான அமித் மாளவியா, “பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் சுபோத் காந்த் சஹாயின் இந்தக் கருத்து மிகவும் கீழ்த்தரமானது. இழிவான வார்த்தைகளில் காங்கிரஸார் பேசுவது இது முதல்முறை அல்ல. ஒட்டுமொத்தத்தில் காங்கிரஸ் விரக்தி அடைந்துள்ளது. காங்கிரஸ் விளிம்பு நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது. அவர்களால் முடிந்தது எல்லாம் பிரதமர் மோடியை இதுபோன்ற வார்த்தைகளால் விமர்சிப்பது மட்டும்தான். ஆனால் பிரதமர் மோடி மக்களின் நலனுக்காக நாட்டை சீர்திருத்துவதற்கான முக்கிய அரசியல் முடிவுகளை தொடர்ந்து எடுத்து வருகிறார்” என்று குறிப்பிட்டார்.

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் கண்டனம்

ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ரகுபர் தாஸ் கூறுகையில், “பிரதமர்
மோடியை காங்கிரஸ் தலைவர் அவமதித்து பேசியிருக்கிறார், இதுபோன்ற அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான வார்த்தைகளை பயன்படுத்துவது காங்கிரஸின் மரபணுவில் கலந்த ஒன்று. பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது சட்டப்பேரவை தேர்தலின்போது, காங்கிரஸ் தலைவர் சோனியா அவரை  ‘மவுத் கா சவுதாகர்’ மரண வியாபாரி என்று பேசி இருந்தார். அது பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது. இதற்காக சோனியாவிடம் விளக்கம் கேட்டு அப்போது தலைமை தேர்தல் கமிஷன் நோட்டீசும் அனுப்பியது” என்று கேலியாக தெரிவித்தார்.

அரசியல் நோக்கர்கள் கருத்து

டெல்லியில் அரசியல் நோக்கர்கள் கூறும்போது, “அக்னி பாத் திட்டம் தொடர்பாக பீகார், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், தெலுங்கானா, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் ரயில்களுக்கும், ரயில் நிலையங்களுக்கும் தீ வைக்கப்பட்டதால் 700 கோடி ரூபாய்க்கு மேல் ரயில்வே சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன.
இதுபோன்ற சம்பவங்களின் பின்னணியில் ஒரு சில பிரிவினைவாத அமைப்புகளும், அரசியல் கட்சிகள் சிலவற்றின் கூட்டு சதியும் இருக்கலாமென்று, கூறப்பட்டு வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர் சுபோத் காந்த் சஹாய் இதுபோல் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியிருப்பது, மிகுந்த அதிர்ச்சி தருவதாக உள்ளது.

அவருடைய மனதிலுள்ள வன்மம் வெளிப்பட்டு இருக்கிறதோ என்று நினைக்கவும் தோன்றுகிறது. இது காங்கிரஸ் நடத்திய சத்யாகிரகப் போராட்டத்தின் திசையை அப்படியே திருப்பி விட்டும் உள்ளது.

வரலாற்றைப் படித்தவர்களுக்கு ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் எப்படி மரணம் அடைந்தார் என்பது நன்றாகத் தெரியும். அதனால்தான் காங்கிரஸ் தலைவரின் பேச்சு பாஜக தலைவர்களிடம் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரிடமும் கடுமையான கண்டனத்தைப் பெற்றுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரே இப்படி பேசுவது காங்கிரஸ் கட்சிக்குத்தான் அவப்பெயரை ஏற்படுத்தும்.

மோசமான விளைவை நோக்கி காங்கிரஸ்

எனவே நாட்டின் பிரதமரை இது மாதிரி நாகரீகமாகவும் இழிவுபடுத்தியும் பேசுவதை காங்கிரஸ் தலைவர்கள் தவிர்க்க வேண்டும். மோடியையும், மத்திய பாஜக அரசையும் அரசியல் மற்றும் கருத்தியல் ரீதியாகத்தான் காங்கிரஸ் எதிர்கொள்ளவேண்டும். இல்லையென்றால் அக்கட்சிக்கு ஒரு சில மாநிலங்களில் உள்ள ஓரளவு செல்வாக்கும் அடியோடு சரிந்து அதலபாதாளத்திற்கு போய்விடும்.

ஏனென்றால் ஒரு தலைவருக்கு சாபம் விடுவது போல பேசுவது, அவருக்கு மேலும் மேலும் மக்களிடம் செல்வாக்கைத்தான் பெருக்கும். ஏற்கனவே 2024 தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி சேருவதற்கு மாநிலக் கட்சிகள் பல தயக்கம் காட்டி வரும் நிலையில் இது இன்னும் மோசமான விளைவைத்தான் ஏற்படுத்தும்” என்று அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

காங்கிரஸ் மேலிடம் இதைப் புரிந்து கொள்ளுமா?… என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

  • Good Bad Ugly movie latest news “கங்குவா” படத்தால் நடந்த விபரீதம்…அஜித் படத்திலிருந்து நீக்கப்பட்ட முக்கிய பிரபலம் ..!
  • Views: - 682

    0

    0