பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை முழக்கம் : எரிச்சலில் ஓபிஎஸ்… அடுத்தகட்ட நடவடிக்கை என்ன தெரியுமா..?

Author: Babu Lakshmanan
23 June 2022, 1:39 pm

சென்னை : பொதுக்குழுவில் எழுப்பப்பட்ட ஒற்றைத் தலைமை முழக்கத்தால் கடுப்பாகிப் போன ஓ.பன்னீர்செல்வம், அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.

பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் தனித்தனியே தங்களின் வாகனங்களில் வந்தனர். வரும் வழியில் செண்டை மேளம், தாரை தப்பட்டை, ஆட்டம், பாட்டம் என எடப்பாடி பழனிசாமிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், தனித்தனியே மேடைக்கு வந்த இருவரும் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் நடுவில் அமர்ந்திருக்க இருபுறமும் அமர்ந்தனர். தொடர்ந்து, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட இருந்த 23 தீர்மானங்களை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். ஆனால், அந்த தீர்மானங்களை பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசமாக 3 முறை தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய சிவி சண்முகம் மற்றும் கேபி முனுசாமி ஆகியோர், பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் நிராகரித்து விட்டதாகவும், ஒற்றைத் தலைமை தீர்மானத்தோடு இணைத்து அடுத்த பொதுக்குழுவில் அறிவிக்கப்படும் என்று கூறினர்.

மேலும், அடுத்த மாதம் 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் கூடுவதாக அறிவிக்கப்பட்டு, அதில் ஒற்றைத் தலைமை குறித்து முடிவு செய்யப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

இபிஎஸ் தரப்பினரின் இந்த செயல்களால் அதிருப்தியடைந்த ஓபிஎஸ், தனது ஆதரவாளர்களை அழைத்துக் கொண்டு மேடையில் இருந்து இறங்கிச் சென்றார். அப்போது, மேடையில் இருந்த மைக்கில், இந்தப் பொதுக்குழு செல்லாது என்று கூறிவிட்டு, வைத்திலிங்கம் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் கூடாது என்பதற்காகத்தான் நீதிமன்றம் வரை சென்றார் ஓபிஎஸ். இப்படியிருக்கையில், அவரை அவமதிக்கும் வகையில் நடந்த இந்த செயல்களால் அவர் உச்சகட்ட கோபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பொதுக்குழுவில் நடந்த சர்ச்சைகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார். 23 தீர்மானங்களை ரத்து செய்ததாக இன்று அறிவிப்பு செய்தது தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு எதிரானது என்றும், பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை குறித்து அறிவித்ததும் தேர்தல் ஆணைய விதிகமுறைகளுக்கு எதிரானது என்று ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுக்குழுவில் நடந்த விவகாரங்கள் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை என்ன..? என்பது குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். பின்னர், இன்று மாலை 6 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஓபிஎஸ் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Family Man 3 Actor Rohit Basfore Found Dead Near Guwahati Waterfall நடுக்காட்டில் பிரபல நடிகர் சடலமாக மீட்பு : சதி திட்டம் போட்ட நண்பர்கள்? பகீர் பின்னணி!