ஒருவேளை குடியரசு தலைவர் ஆகினால்.. பாண்டவர்கள் யார்…? குடியரசு தலைவர் வேட்பாளர் குறித்து பிரபல இயக்குநர் சர்ச்சை கருத்து..
Author: Babu Lakshmanan25 June 2022, 9:33 am
குடியரசு தலைவர் பாஜக வேட்பாளர் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பிரபல இயக்குநர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தற்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த மாதம் 18ம் தேதி, புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜுலை 21ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.
இந்த தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்கா களமிறங்கியுள்ளார்.
இதனிடையே, குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் திரவுபதி முர்மு நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஸ்வந்த் சின்கா நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் திரவுபதி முர்மு குறித்து பிரபல திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மா சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஒருவேளை திரவுபதி ஜனாதிபதியானால் பாண்டவர்கள் யார்? மற்றும் மிகவும் முக்கியமாக பாண்டவர்கள் யார்?” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, திரவுபதி முர்மு குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த இயக்குனர் ராம்கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.