அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியில் உத்தவ் தாக்கரே… ஒருபுறம் அதிருப்தி எம்எல்ஏக்கள்.. மறுபுறம் ஆதரவு மூத்த தலைவருக்கு ஸ்கெட்ச்..!!
Author: Babu Lakshmanan27 June 2022, 2:47 pm
மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சியின் ஆட்சி கவிழ உள்ள நிலையில், அக்கட்சிக்கு மேலும் ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவுக்கு எதிராக அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, 40க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளார்.
இதனிடையே, கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளாததால், ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து துணை சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, இது தொடர்பாக 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கும் துணை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இதனால், மகாராஷ்டிரா அரசியலில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், மரகாராஷ்டிராவில் எம்.பி.யும், சிவசேனா செய்தித்தொடர்பாளருமான சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. நிலமோசடி வழக்கில் நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மராட்டியத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்களை சஞ்சய் ராவத் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.இது சிவசேனா கட்சியினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.