‘முதலமைச்சரின் உடல்நலத்தில்கூட அலட்சியமா..?’… காஞ்சி அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் மீது திமுகவினர் அதிருப்தி..!

Author: Babu Lakshmanan
29 June 2022, 2:16 pm

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை நிர்வாகம் “முதல்வரின் உடல் நலத்தில் கூட” அக்கறை செலுத்த மறுப்பதாக கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சாலை மார்க்கமாக சென்னையில் இருந்து காஞ்சிபுரம் வழியாக நேற்று மாலை முதலமைச்சர் ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்டம் சென்றார். மீண்டும் நாளை இதே மார்க்கத்தில் சென்னை திரும்புகிறார்.

தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் இரு எல்லைகளில் இருந்தும் உயிர்காக்கும் மருந்துகள், நவீன மருத்துவ உபகரணங்கள் அடங்கிய ஆம்புலன்ஸில் அனுபவமிக்க மருத்துவ குழுவினர் முதல்வரின் “கான்வாய்” வாகனத்துடன் செல்வது வழக்கம்.

வழியில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அதைச் சந்திப்பதற்காக “மருத்துவ பிரிவில்” அனுபவம் மிக்க மருத்துவரை அனுப்ப வேண்டும் என SP அலுவலகம் கடிதம் மூலம் இரண்டு நாட்களுக்கு முன்பே கேட்டிருந்தது. காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை நிர்வாகத்திடமிருந்து ஆம்புலன்சில் செல்ல டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என பதில் கடிதமும் அனுப்பப்பட்டது.

நேற்று மாலை காஞ்சிபுரம் எல்லையான செட்டி பேடு ஜங்சன் பகுதியில் முதல்வரின் கான்வாய் வாகனம் வந்த போது, மருத்துவ பாதுகாப்புக்காக வந்த ஆம்புலன்ஸில் மனநல மருத்துவர் மட்டுமே இருந்ததால், திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

முதல்வரின் வருகையின் போது கூட மருத்துவமனை நிர்வாகம் இவ்வளவு அலட்சியப் போக்கை கடைபிடிக்கின்றதே என சமூக ஆர்வலர்களும் வேதனை அடைந்தார்கள். துறை சார்ந்த பல மருத்துவர்கள் அரசு தலைமை மருத்துவமனையில் இருந்தும் அவர்களை அனுப்பாமல், சம்பந்தமே இல்லாமல் மனநல மருத்துவரை கான்வாய் வாகனத்துடன் அனுப்பிய மருத்துவமனை நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு சமூக அமைப்பினர் கூக்குரல் இடுகின்றனர்.

தமிழக முதல்வரின் வருகையின் போதே இப்படி அலட்சியமாக நடந்து கொள்ளும் மருத்துவமனை நிர்வாகம் பொதுமக்களுக்கு எப்படி சேவை செய்ய இயலும் எனவும் சமுக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றார்கள்.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 699

    0

    0