இரவு பணி முடிந்து பைக்கில் சென்ற ஜெயில் வார்டன் : பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பரிதாப பலி!!
Author: Udayachandran RadhaKrishnan1 July 2022, 12:52 pm
திண்டுக்கல் : இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் திண்டுக்கல் ஜெயில் வார்டன் பரிதாபமாக பலியானார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பெருமாள் கோவில் பட்டியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் பால்பாண்டி (வயது 27). திண்டுக்கல் மாவட்ட சிறைச்சாலையில் வார்டனாக பணி புரிந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சிறுநாயக்கன்பட்டியிலிருந்து அணைப்பட்டி செல்லும் சாலை குண்டல் பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் இவர் மீது மோதியது.
இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. தொடர்ந்து இவர்கள் இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பால் பாண்டி உயிரிழந்தார். மேலும் பலத்த காயமடைந்த நிலக்கோட்டை நேரு நகரைச் சேர்ந்த மதன் பாரதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த பால்பாண்டிக்கு காயத்ரி என்ற மனைவியும் ஐந்து மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.