ஒத்த கருத்தால் நாடே தீக்கிரையாகிடுச்சு… மன்னிப்பு கேட்டே ஆகனும்… நுபுர் ஷர்மா மீது உச்சநீதிமன்றம் காட்டம்..!!

Author: Babu Lakshmanan
1 July 2022, 12:47 pm

சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நுபுர் சர்மா தேசத்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

கடந்த மே மாதம் ஞானவாபி மசூதி விவகாரம்‌ தொடர்பாக தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நுபுர்‌ சர்மா, நபிகள்‌ நாயகத்தை அவமதித்து பேசியதாகக்‌ கூறப்பட்டது. அவரது இந்தப் பேச்சுக்கு நாடு முழுவதும்‌ கடும்‌ எதிர்ப்பும் கிளம்பியது. மேலும், வன்முறை மற்றும்‌ கலவரம்‌ வெடித்தது.

அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்த தையல்காரரை இஸ்லாமியர்கள் இருவர் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, தனக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில்‌ இருக்கும்‌ வழக்குகளை
டெல்லிக்கு மாற்றக்‌ கோரி தாக்கல்‌ செய்த மனு உச்ச நீதிமன்றத்தில்‌ இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நுபுர் ஷர்மாவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், சர்ச்சைக்குரிய தனது கருத்திற்கு தொலைக்காட்சியின் முன்பு தோன்றி, தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

மேலும்‌, நாட்டு மக்களால்‌ நுபுர்‌ சர்மாவுக்கு அச்சுறுத்தலா அல்லது நுபுர்‌ சர்மாவால்‌ நாட்டுக்கு அச்சுறுத்தலா..? என்றும்‌, நுபுர்‌ சர்மாவுக்கு எதிராக பல்வேறு புகார்கள்‌ வந்ததே, அதை டெல்லி போலீஸ் தொட்டுக்கூட பார்க்கவில்லை என்றுக் கூறிய நீதிபதிகள், நுபுர்‌ சர்மா அளித்த புகாருக்கு உடனே ஒருவரைக்‌ கைது செய்திருக்கிறீர்கள்‌ என்று டெல்லி காவல்துறையையும்‌ கண்டித்துள்ளனர்‌.

மேலும், ஜனநாயகம்‌ அனைவருக்கும்‌ பேச்சுரிமையை வழங்கியுள்ளதாகவும், ஒரு கட்சியின்‌ செய்தித்‌ தொடர்பாளராக இருப்பதாலேயே எதையும்‌ சொல்லிவிட முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

உதய்பூரில்‌ நடந்த தையல்காரரின்‌ கொலைக்கு நுபுர்‌ சர்மாவின்‌ பொறுப்பற்ற செயல்களே காரணம்‌ என்றும், நுபுர்‌ சர்மா நடந்து கொண்ட விதம்‌, அதன்பிறகு அவரது வழக்குரைஞர்‌ சொல்வதும்‌ பொறுப்பற்றதாக உள்ளதாக உச்சநீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…