பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் முகக்கவசம் இலவசம் : கோவை ரயில் நிலையத்தில் DROP N DRAW என்ற புதிய இயந்திரம் அறிமுகம்!!
Author: Udayachandran RadhaKrishnan1 July 2022, 5:15 pm
கோவை ரயில் நிலையத்தில் உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு முகக்கவசம் இலவசமாக,’டிராப் என் டிரா’ என்ற புதிய முயற்சியின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக கோவை ரயில் நிலையத்தில், உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை திரும்ப பெறும் முயற்சி பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
டிராப் என் டிரா என்னும் திரும்ப பெறும் புதிய முறை கோவை ரயில் நிலையத்தின் பிளாட்பார்ம் எண்: 3-ல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறையின் மூலம் பயணிகள் உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை இயந்திரத்தின் உட்பகுதியில் செலுத்தி, விருப்பமான தேர்வை தேர்ந்தெடுத்து,’ இலவசமாக ஒரு முககவசம்’ அல்லது ‘எடையை சரிபார்க்கலாம்’.
இந்த இயந்திரத்தின் உட்பகுதியில் செலுத்தப்பட்ட உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் துண்டு துண்டாகப்பட்டு, தனி தொட்டிகள் மூலம் மறுசுழற்சி செயல்முறைக்கு சேகரிக்கப்படும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த டிராப் என் டிரா என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், இந்த புதுமையான தயாரிப்பை உற்பத்தி செய்கிறது. இந்த இயந்திரம் கோவை ரயில் நிலையத்தில் நிறுவப்படுவதற்காக லேடீஸ் சர்க்கிள் நிறுவனத்தால் ஸ்பான்சர் செய்யப்பட்டது.