அரைவேக்காடுகளை விட்டுவிட்டு ஆட்சியில் பயனடைந்தவர்களிடம் பேட்டி எடுங்க.. மறைமுகமாக அண்ணாமலையை விமர்சித்த CM ஸ்டாலின்..!!

Author: Babu Lakshmanan
2 July 2022, 5:17 pm

கரூர் : அரைவேக்காடுகளிடம் பேட்டி எடுப்பதற்கு பதில், எங்கள் ஆட்சியில் பயனடைந்த மக்களிடம் பேட்டி எடுங்கள் என்று மறைமுகமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அந்தவகையில், முதலமைச்சராக பதவியேற்ற பின் அவர் முதன்முறையாக கரூர் மாவட்டத்திற்கு நேற்று வருகை புரிந்தார். நேற்று மாலை தனி விமான மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.

சாலை மார்க்கமாக அங்கிருந்து புறப்பட்ட முதல்வருக்கு கரூர் மாவட்டம் குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், வெங்ககல்பட்டி ஆகிய பகுதிகளில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். நேற்று இரவு மாவட்ட சுற்றுலா மாளிகையில் தொழிலதிபர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார். தொடர்ந்து சுற்றுலா மாளிகையில் இரவு ஓய்வெடுத்துக் கொண்டார்.

இன்று மாவட்ட சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்பட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் திருமாநிலையூர் அரங்கத்திற்கு வருகை தந்தார். மேலும், 23 இடங்களில் வழிநெடுகிலும் நின்று பிரம்மாண்ட வரவேற்பு அளித்த நிலையில், 80,750 எண்ணிக்கையிலான பயனாளிகளுக்கு ரூ.500.83 கோடி மதிப்பிலான பயன்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கி, ரூ.581.44 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், 95 எண்ணிக்கையிலான ரூ.28.60 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து முதல்வர் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது, பல்வேறு நாடுகளில் இருந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஜவுளிப்பொருட்களை காட்சிபடுத்த ஒரு அரங்கம் வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தனர். சர்வதேச அளவில் ஜவுளித்தொழில் நுட்பம் அடங்கிய பரிசோதனை நிலையம் அமைக்கப்படும். விரைவில் கரூர் மாநகருக்கு புதிய பேருந்து நிலையம் திருமாநிலையூர் பகுதியில் அமைய உள்ளது

இதுமட்டுமில்லாமல், இங்குள்ள செய்தியாளர்களிடம் உரிமையாக கேட்கின்றேன். எங்கள் ஆட்சியில் நலத்திட்டம் பெற்ற மக்களிடம் சென்று பேட்டி கேளுங்கள். மேலும், பயிர்க்கடன், நகைக்கடன், மகளீருக்கு இலவச பேருந்து உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை அமல்படுத்தி, அதன்படி ஏராளமான பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். அவர்களிடம் சென்று பேட்டி கேளுங்கள். இந்த ஆட்சியில் சமூக நீதி எப்படி உள்ளது என்று போய் கேளுங்கள் என்று செய்தியாளர்களுக்கு அட்வைஸ் கொடுப்பது போல் விழா மேடையில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

அதை விட்டு விட்டு, நாள்தோறும் தானும் இருப்பதாக நினைத்து, நான் நினைப்பதை மட்டும் நடக்க வேண்டுமென்று நினைப்பவன் நான் அல்ல, நாங்களும் இருக்கின்றோம் என்று மைக் முன்னர் நின்று கொண்டு வாந்தி எடுப்பவர்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல தேவையில்லை, என்று மறைமுகமாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையை கடுமையாக அரசு விழா மேடையில் விமர்சித்தார்.

  • Attakathi Dinesh latest news கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!