மக்களின் தனிப்பட்ட உரிமைகளை நிலைநாட்டுவதே திராவிட மாடல் ஆட்சி, மதத்தை வைத்து அரசியல் பண்ணாதீங்க : அமைச்சர் மூர்த்தி காட்டம்!!
Author: Udayachandran RadhaKrishnan2 July 2022, 5:58 pm
போலி பத்திரங்களை ரத்து செய்ய பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் சட்ட மும்வடிவுக்கு ஒரு மாதத்தில் ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்கும் எனவும், வணிக வரி செலுத்தாத டீலர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரை உத்தங்குடியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வட்டார அளவிலான இளைஞர்கள் திறன் திருவிழா வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் ஆட்சியர் அனீஷ் சேகர் மற்றும் 500 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.
விழாவுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.மூர்த்தி கூறுகையில்,
“வணிக வரி கட்டாத 3 லட்சத்திற்கும் மேற்பட்ட டீலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
நோட்டீஸ் அனுப்பியதன் விளைவாக 67 கோடி ரூபாய் அளவில் வணிக வரி வசூலிக்கப்பட்டுள்ளது.
வணிக வரி செலுத்தாத டீலர்களுக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
முதியோர்கள் பத்திரப்பதிவு செய்ய வந்தால் அவர்களை காத்திருக்க வைக்க கூடாது.
முதியோர்களை காத்திருக்க வைக்கும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
போலி பத்திரங்களை பதிவாளர்களே ரத்து செய்ய அதிகாரம் வழங்கும் சட்ட முன் வடிவிற்கு மத்திய அரசு ஒரு மாதத்தில் ஒப்புதல் அளிக்கும்.
ஆன்மீக விவகாரத்தில் யாருடைய தனிப்பட்ட உரிமையில் முதல்வர் தலையீடுவதில்லை. திமுகவிலும் ஆன்மிகவாதிகள் உள்ளனர். தமிழகத்தில் மதத்தை வைத்து தவறான அரசியல் நடத்தி விட கூடாது என்பதே எங்களின் எண்ணம். மக்களின் தனிப்பட்ட உரிமைகளை நிலைநாட்டுவதே திராவிட மாடல் ஆட்சி என தெரிவித்தார்.