ஓபிஎஸ் நெருங்க முடியாத இடத்தில் இபிஎஸ்… அதிமுகவில் உருவாகிறது ஒற்றைத் தலைமை..? குஷியில் ஆதரவாளர்கள்..!!
Author: Babu Lakshmanan7 July 2022, 2:28 pm
ஜுலை 11ம் தேதி நடக்கும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற உத்தரவை மீறி அவைத்தலைவர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாகவும், அடுத்த பொதுக்குழு குறித்த அவரது அறிவிப்பும் நீதிமன்ற அவமதிப்பு என பன்னீர்செல்வம் தரப்பினர் குற்றம் சாட்டினர்.
கடந்த வாரம் இந்த மனு மீதான விசாரணையின் போது, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகள் ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவிற்கு மட்டுமே பொருந்தும் என்றும், அவைத்தலைவர் இல்லாமல் பொதுக்குழுவை எப்படி கூட்ட முடியும்..? எனவே, அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கேட்க முடியாது, என்று நீதிமன்றம் கூறிவிட்டது. இது ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவாக கருதப்பட்டது. இருப்பினும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஏற்று, நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதனிடையே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிராகவும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் சரமாரியான வாதங்களை முன்வைத்தனர். இதனைக் கேட்ட நீதிமன்றம், ஒரு கட்சியின் உள்கட்சி விவகாரங்களில் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை தான் உயர்நீதிமன்றம் தலையிட முடியும் என்றும், உட்கட்சி விவகாரத்தில் உயர்நீதிமன்றம் எல்லை மீறி நடந்து கொண்டது, எனக் கூறியது.
மேலும், வரும் 11ம் தேதி நடக்கும் அதிமுகவின் பொதுக்குழுவிற்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், ஏதேனும் நிவாரணம் தேவைப்பட்டால், பன்னீர்செல்வம் உயர்நீதிமன்றத்தை நாடலாம், என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஓபிஎஸ் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கும், இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவும் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், பெரும் எதிர்பார்ப்புடன் இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர் காத்திருந்தனர்.
முதலில் இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய மனு விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி மற்றும் மாலா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை தொடர நீங்கள் யார்? என்ன அடிப்படை உரிமை உள்ளது என்றும், தேவையற்ற விளம்பரமாக உள்ளதாக கூறி ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அதிரடி உத்தரவிட்டனர். இது இபிஎஸ்-க்கு சாதகமானதாக பார்க்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, விசாரணைக்கு வந்த இபிஎஸ்க்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்த போது, உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மேற்கோள் காட்டி, பொதுக்குழுவிற்கு தடை மற்றும் பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மீதான நீதிமன்ற வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.
ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மனுக்கள் அடுத்தடுத்து தள்ளுபடி செய்தது இபிஎஸ் தரப்பினருக்கான வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. சட்ட முறைப்படி தான் பொதுக்குழுவை கூட்டுகிறோம், தீர்மானங்களை நிறைவேற்றுகிறோம் என இபிஎஸ் தரப்பினர் மாறிமாறி விளக்கம் கொடுத்திருந்தாலும், ஓபிஎஸின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதன் மூலம், இபிஎஸ் தரப்பினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், சட்டத்திற்குட்பட்டதுதான் என்பதை விளக்கும் வகையில் அமைந்துள்ளது.
எனவே, ஒற்றைத் தலைமை விவகாரத்தில் இபிஎஸ் தரப்பினரின் கையே ஓங்கியுள்ளது.