திமுக அரசுக்கு அண்ணாமலை விதித்த கெடு… திருமா, வைகோவை மிஞ்சிய கே.எஸ்.அழகிரி..!
Author: Babu Lakshmanan7 July 2022, 2:44 pm
முட்டுக் கொடுக்கும் கூட்டணி
தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகளில் காங்கிரஸ், விசிக, மதிமுக ஆகியவற்றுக்கு இடையே கடந்த ஓராண்டாக ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் மட்டும் கடும் போட்டி நிலவுவதை காணமுடிகிறது.
மாநில பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசுக்கு எதிராக ஏதாவது கருத்து தெரிவித்தாலோ அல்லது போராட்டம் நடத்தினாலோ அதற்கு வரிந்து கட்டிக்கொண்டு உடனுக்குடன் பதில் அளிப்பது யார்? என்பதே அந்த போட்டி எனலாம்.
இதில் முன்னணியில் இருப்பவர், தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரிதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அண்ணாமலை திமுக அரசை குறை கூறும் போதெல்லாம் அதற்கு திமுக தலைவர்கள் உடனடியாக பதில் அளிக்கிறார்களோ, இல்லையோ எல்லோரையும் முந்திக் கொண்டு கே எஸ் அழகிரி பதில் சொல்வதும் கண்டனம் தெரிவிப்பதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது. அவருக்கு பின்புதான் விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போன்றவர்களெல்லாம்.
அதுவும் இதில் அழகிரி காட்டும் மின்னல் வேகம் மெய்சிலிர்க்க வைக்கும். அண்ணாமலை என்றாலே அவர் ஏன் இப்படி துடிதுடிக்கிறார்? என்ற கேள்வி அரசியலில் ஆர்வம் இல்லாதவர்களிடம் கூட வந்து விடுகிறது.
பாஜகவின் பாதயாத்திரை
அண்மையில் இப்படித்தான் சென்னையில் மாநில பாஜக சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து அண்ணாமலையின் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
அப்போது அண்ணாமலை பேசுகையில் “பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் 4 ரூபாயும் குறைப்பதாக திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் பெட்ரோலில் மட்டும் 3 ரூபாய் குறைத்தனர். டீசலில் 1 ரூபாய் கூட குறைக்கவில்லை, மேலும் பெட்ரோலில் 2 ரூபாயை குறைக்கவில்லை. பிரதமர் மோடி கடந்த 7 மாதங்களில் பெட்ரோல் விலையை இரண்டு முறை குறைத்து, 14 ரூபாய் 50 காசு வரை குறைக்கப்பட்டு உள்ளது. டீசல் 17 ரூபாய் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது.
1967க்குப் பின்னர் வந்த திராவிட மாடல் ஆட்சி இந்தியாவுக்கே வழிகாட்டி என்று கூறும் நீங்கள், உத்தரப் பிரதேசத்தையும், பீகாரையும் பின்தங்கிய மாநிலம் என்று கூறும் திமுக அரசு, உத்தரப் பிரதேசத்தில் 12 ரூபாய் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளபோது, திமுக அரசால் ஏன் குறைக்க முடியவில்லை? கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்டுகள் தங்கள் தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று சொல்லவில்லை; ஆனால், குறைத்துள்ளனர்.
அதேநேரம் தேர்தல் வாக்குறுதியில் எழுத்துபூர்வமாக கொடுத்துள்ளதை நீங்கள் குறைக்கவில்லை என்றால், உங்களுக்கு மனசாட்சி இல்லை என்றுதானே அர்த்தம்?
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் 3 லட்சத்து 20 ஆயிரம் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள். ஆனால், ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்று 9 ஆண்டுகளாக தற்காலிக ஆசிரியர்களாக உள்ளவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல், தற்காலிக ஆசிரியர்களுக்கு புதிதாக நியமனம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எதற்காக… பணம் சம்பாதிப்பதற்காக, பணம் வாங்கிக் கொண்டு அந்த ஆசிரியர் பணியிடங்களை விற்பனை செய்வதற்காகத்தானே?…
பணத்தை கையிலே வைத்துக்கொண்டு ஜனநாயகத்தை விலைபேச முடியும் என்று நினைக்கக்கூடியவர்கள். எந்தத் தேர்தல் வேண்டுமானாலும் நடக்கட்டும், கடைசியில் 1000 ரூபாய் பணம்தானே பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கக்கூடிய அரசியல்வாதிகள் இருக்கக்கூடிய தமிழகத்தில், பாஜக 25 எம்பிக்களை கொண்டு வருவோம் என்று களத்தில் இறங்கியிருக்கிறோம்.
டிசம்பர் 31-ம் தேதி வரை தமிழக அரசுக்கு கெடு விதிக்கிறோம். உங்களுடைய 505 தேர்தல் வாக்குறுதிகளையும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் நிறைவேற்றவில்லை, தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பாதி கடைகளை மூடவில்லை என்றால், பாஜகவின் பாதயாத்திரையை ஜனவரி 1-ம் தேதி கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் ஆரம்பித்து, 365-வது நாளில் சென்னை கோபாலபுரத்தில் முடித்துவைப்போம் “என்று ஆவேசமாக கூறினார்.
துடிதுடித்த அழகிரி
அண்ணாமலை இப்படி திமுக அரசைக் கண்டித்து பேசியதற்கு திமுகவிலிருந்து கூட நேரடியாக எந்த பதிலும் இதுவரை கூறப்பட்டதாக தெரியவில்லை. ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி இதில் காட்டிய சுறுசுறுப்புதான் அனைவரையும் ஆச்சரியப்படவைக்கிறது.
அடுத்த சில மணி நேரங்களிலேயே அண்ணாமலையை கண்டித்து அழகிரியின் நீண்ட அறிக்கை ஒன்று வெளியானது. திமுகவின் இரண்டாம் நிலை தலைவர்கள் வழக்கமாக வசைபாடுவதை விட ஒருபடி தூக்கலாகவும் அது இருந்தது.
அவர் வெளியிட்ட அறிக்கையில், திமுக அரசு நிகழ்த்தி உள்ளதாக கூறப்படும் பல்வேறு சாதனைகளையும் பட்டியல் போட்டு காட்டியிருக்கிறார்.
அதேநேரம் மத்திய பாஜக அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பு, வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டேயும் போகிறார். அழகிரியின் இந்த அறிக்கை திமுக தலைவர்கள் வெளியிடும் அறிக்கை போன்றே இருந்தது இங்கே குறிப்பிடத்தக்க அம்சம்.
“தமிழகத்தில் எப்பாடுபட்டாவது பாஜகவை வளர்க்க வேண்டுமென்று அண்ணாமலை அதிரடி போராட்டங்களை அடிக்கடி நடத்தி வருகிறார். தமிழகத்தின் ஒட்டுமொத்த நலனுக்கு எதிராக மத்திய பாஜக அரசு செயல்படுவதால் தொடர்ந்து 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டப்பேரவை தேர்தல், அதைத் தொடர்ந்து ஊரக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களிலும் திமுக தலைமையிலான, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணிக்கு அமோக ஆதரவை வழங்கி வெற்றி மேல் வெற்றியை மக்கள் வழங்கி வருகிறார்கள். தமிழக பாஜகவை அனைத்து தேர்தல்களிலும் முற்றிலும் நிராகரித்தும் வருகிறார்கள். இதன்மூலம் தமிழக பாஜகவின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறிவிட்டது.
இந்நிலையில், டிசம்பர் 31-ம் தேதிக்குள் திமுக வழங்கிய 505 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை பாத யாத்திரை நடத்தப்படும் என்று அண்ணாமலை அறிவித்திருக்கிறார்.
திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட 505 வாக்குறுதிகளில் பாதிக்கு மேல் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பாஜக போராட்டத்தில் 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு தருவதாக திமுக கூறி 15 மாதங்களில் எந்த வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தவில்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து காழ்ப்புணர்ச்சியோடு அண்ணாமலை பேசியிருக்கிறார்.
தெற்காசியாவிலேயே முதலீடுகளுக்கு மிகவும் உகந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிற வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக முதலமைச்சர் எடுத்து வருகிறார். அதனால்தான் அதிமுக ஆட்சியில் 14-வது இடத்தில் இருந்த தமிழகம் இன்றைக்கு மூன்றாவது இடத்திற்கு உயர்ந்திருக்கிறது. இதை பாராட்ட மனமில்லை என்றாலும், குறைந்தபட்சம் நியாயத்தின் அடிப்படையில் விமர்சிக்காமல் இருக்கலாம் அல்லவா? ஆனால், அதை பாஜகவிடம் எதிர்பார்க்க முடியாது.
திமுக அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகளுக்காக கன்னியாகுமரியிலிருந்து கோபாலபுரத்திற்கு பாத யாத்திரை நடத்தப் போவதாக அண்ணாமலை கூறுகிறார். அவர் பாத யாத்திரை நடத்தினாலும் சரி அல்லது கன்னியாகுமரியிலிருந்து உருண்டு, உருண்டு கோபாலபுரம் வந்தாலும் சரி தமிழகத்தில் பாஜக மீது மக்களுக்கு இருக்கிற வெறுப்பு கடுகளவும் குறையாது. எனவே, தமிழகத்தில் மக்கள் பிரச்சினைகளுக்காக போராட்டம் நடத்துகிறோம் என்று கூறி இரட்டை வேடம் போடுவதை தமிழக பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று அந்த அறிக்கையில் அவர் பொங்கியுள்ளார்.
திமுகவின் குரல்
“அண்ணாமலைக்கு எதிராக கே எஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை பல்வேறு யூகங்களுக்கு இடம் அளிப்பதாக உள்ளது. அதை நாம்தான் வெளியிட்டோமா?..
என்று அவரே வியப்படையும் வகையில் அந்த அறிக்கை அமைந்து இருப்பதுதான் அதற்கு காரணம்.
வேறு எந்த ஒரு எதிர்க்கட்சி தலைவருக்கு எதிராகவும், அழகிரி தனது காங்கிரஸ் தலைவர் பதவி காலத்தில் இப்படியொரு அறிக்கை வெளியிட்டு இருக்கமாட்டார்.
அந்த அளவிற்கு அவர் திமுகவின் குரலாக ஒலித்து இருக்கிறார்” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
“இதற்கு பல காரணங்கள் உண்டு. கே எஸ் அழகிரி இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் நீடிப்பார் என்பது யாருக்கும் தெரியாது. புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை அவர் சிறிதுகாலம் தொடரலாம்.
கடந்த பிப்ரவரி மாதம் மேலும் எனக்கு இரண்டு ஆண்டுகள் தலைவர் பதவி கொடுங்கள் மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்தி காட்டுகிறேன் என்று சோனியாவுக்கும், ராகுலுக்கும் வேண்டுகோள் வைத்தார். ஆனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காட்டும் அளவிற்கு அவரிடம் கட்சியை வளர்ப்பதில் அக்கறை இல்லை என்பதை
புரிந்து கொண்டதாக கூறப்படும் காங்கிரஸ் தலைமை அதற்கு ஓகே சொல்லவில்லை என்கின்றனர்.
ஆனால் அழகிரியின் கணக்கோ வேறு மாதிரி இருப்பது போல் தெரிகிறது.
திமுக கூட்டணியிலேயே நீடித்தால் அதன் மூலம் தமிழக காங்கிரசுக்கு கிடைக்கும் ஓரளவு வெற்றியால் தனக்குள்ள மதிப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று அவர் கருத வாய்ப்பு உள்ளது. அல்லது ஏதோ ஒரு ஆதாயத்தை எதிர்பார்த்து கூட அவர் இப்படி கூறி இருக்கலாம் என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் உள்ளது.
அதனால்தான் தலைவர் பதவி முடியப்போகும் நிலையில், நம்மால் முடிந்தவரை அண்ணாமலைக்கு எதிராக கோபத்தை காட்டுவோமே என்றும் அவர் நினைத்திருக்கலாம்.
‘ஓவர்டேக்’
பாஜகவுக்கு எதிராக எந்த தலைவர்கள் கருத்து தெரிவித்தாலும் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் அண்ணாமலை இந்த இளம் வயதிலும் சாதுர்யமாக செயல்படுகிறாரே, சில செய்தியாளர்கள் எப்படித்தான் கிடுக்குப்பிடி கேள்விகளை எழுப்பினாலும் அதற்கு சாமர்த்தியமாக பதில் அளிப்பதுடன் கேள்வி
கேட்டவர்களையே திணறடிக்கும் திறமையும் அண்ணாமலையிடம் இருக்கிறதே என்ற எண்ணமும் கூட இப்படி அறிக்கை விட்டதற்கு காரணமாக இருக்கலாம்.
இன்னொரு முக்கிய விஷயத்தை திமுகவின் 12 கூட்டணி கட்சிகளும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அண்ணாமலையை தொடர்ந்து கடுமையாக தாக்கி பேசுவதன் மூலம் அவர் மீது மக்களுக்கு அனுதாபம்தான் உருவாகும். அவருடைய பெயர் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் போய் சேரும். இதனால் பிரதமர் மோடி மீதும்,
பாஜக மீதும் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படும் என்பதும் எதார்த்தம்.
இப்படி அண்ணாமலை மீது வெறுப்பை உமிழ்ந்தே திமுக கூட்டணி கட்சிகள் அவரை இன்று தமிழகத்தில் ஒரு பிரபல தலைவராக மாற்றிவிட்டனர். பாஜகவை தமிழகத்தில் ஆழமாக வேரூன்றச் செய்தும் விட்டனர். குறிப்பாக பெருமளவு இளைய தலைமுறையினரை பாஜக பக்கம் திருப்பி விட்ட பெருமை திமுக கூட்டணி கட்சிகளையே சேரும்.
திமுக தலைவர்கள் இதை தாமதமாக உணர்ந்து கொண்டதால்தான்
என்னவோ, தற்போது அண்ணாமலை வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் நேரடியாக பதில் கூறுவதில்லை, நெருக்கடி எழுந்தால் மட்டுமே பதில் சொல்கிறார்கள் என்கின்றனர்.
இந்த உண்மைகளை எல்லாம் கே எஸ் அழகிரி புரிந்து கொண்டிருந்தால் அண்ணாமலை மீதான தனது கண்டனத்தை வெகுவாக குறைத்துக் கொண்டிருப்பார்.
இப்படி திமுகவினரே பாராட்டும் அளவிற்கு அண்ணாமலைக்கு பதில் அளித்து இருக்கவும் மாட்டார். இந்த விஷயத்தில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இருவரையும் கே எஸ் அழகிரி ‘ஓவர்டேக்’ செய்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.