குதிரையில் உணவு டெலிவரி செய்த ஊழியர்.. கொட்டும் மழையிலும் அயராத உழைப்பு… தகவல் கொடுத்தால் சன்மானம் என அறிவித்த ஸ்விக்கி!!

Author: Babu Lakshmanan
7 July 2022, 4:14 pm

கொட்டும் மழையிலும் குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த ஸ்விக்கி ஊழியர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.5,000 சன்மானம் வழங்கப்படும் என்று ஸ்விக்கி நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டிருப்பது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் உணவை டெலிவரி செய்யும் நிறுவனங்களில் முதன்மையாக இருக்கும் நிறுவனம் ஸ்விக்கி. இந்த நிறுவனம் முழுநேர ஊழியர்களுக்கு மட்டுமின்றி, கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு பகுதிநேர வேலைவாய்ப்பை வழங்கி, அவர்களின் பொருளாதார சிக்கல்களை தீர்க்க உதவும் வகையில் செயல்பட்டு வருகிறது.

அண்மையில் சைக்கிளில் சென்று உணவு விநியோகம் செய்தவர், 3 சக்கர வாகனத்தில் சென்று உணவு விநியோகம் செய்த மாற்றுத்திறனாளி என்று, அடுத்தடுத்து வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியது. இதன்மூலம், அவர்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏதேனும் உதவிகளும் கிடைத்திருப்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம்.

இப்படியிருக்கையில், மகாராஷ்டிராவின் மும்பையில் கடந்த சில நாட்களாக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. சாலைகளில் தேங்கும் மழைநீரால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மும்பையை சேர்ந்த ஸ்விக்கி ஊழியர் ஒருவர் கனமழைக்கு இடையே முதுகில் உணவு டெலிவரி பையுடன் குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

குதிரையில் செல்லும் ஸ்விக்கி ஊழியரின் பின்புறம் இருந்து எடுக்கப்பட்ட வெறும் 6 நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய வீடியோவில் அந்த ஊழியரின் முகம் தெரியவில்லை. இந்த வீடியோ, ஸ்விக்கி நிறுவனத்துக்கு விளம்பரத்தையும், நற்பெயரையும் ஏற்படுத்தி உள்ளது.

எனவே, அடாத மழையிலும் விடாது பணியாற்றிய அந்த ஊழியரை பாராட்ட ஸ்விக்கி நிறுவனம், ‘குதிரையில் சென்ற அந்த ஊழியர் குறித்து சமூக வலைதளம் வாயிலாக முதலில் தகவல் தெரிவிப்பவர்களுக்கு 5,000 ரூபாய் பரிசு அளிக்கப்படும் என்று ஸ்விக்கி நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்விக்கி நிறுவனத்தின் இந்த அறிவிப்பு பொதுமக்களை நெகிழ செய்துள்ளது.

காரணம், தங்களின் கடமையை சரியாக செய்யும் ஊழியர்களுக்கு அந்தந்த நிறுவனங்கள், முறையான அங்கீகாரத்தையும், மதிப்பையும் கொடுக்க முன்வருகிறதே என்பதால்தான்.

  • Sarathkumar and Devayani in 3BHK after 30 years 30 ஆண்டுகளுக்கு பிறகு தேவயானியுடன் சரத்குமார்…வைரலாகும் படத்தின் டீசர்..!