ஆன்லைனில் சாதி, வருவாய், இருப்பிட சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளவர்களுக்கு இத சீக்கிரம் செய்யுங்க : அமைச்சரின் அதிரடி ஆர்டர்!!
Author: Udayachandran RadhaKrishnan8 July 2022, 9:42 pm
தமிழகத்தில் 876 ஊராட்சிகளில் கிராம செயலகம் இந்தாண்டு கட்டப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன், வருவாய் துறை செயல்பாடுகளை வேகப்படுத்தி, எளிமைப்படுத்த வேண்டும். தாலுகா, விஏஓ, ஆர்டிஓ அலுவலங்களில் பொதுமக்கள் சொல்லுகிற கோரிக்கைகளை குறிப்பிட்ட தினங்களுக்காக அலுவலர்கள் முடித்துக்கொடுக்க வேண்டும் என்கிற முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களுக்கும், வேறு மாவட்டங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் வருவாய் துறையில் உள்ளது. டெல்டாவில் நில பிரச்சனை, குத்தகை பிரச்சனை, கோயில், மடத்து நிலங்கள் தொடர்பாக பிரச்சனைகள் அதிகம் உள்ளன.
கோயில் நிலங்களில் குடியிருப்போர்களுக்கு வீட்டு மனை பட்டா கேட்பது அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதை சட்டப்படி எப்படி கையாளுவது என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
இந்தாண்டுக்கான பயிர் காப்பீடு செலுத்தவதற்கான காலக்கெடு இம்மாதம் 30-ம் தேதியோடு முடிவடைய இருக்கிறது.
எனவே, விவசாயிகளுக்கு இன்னும் நான்கு தினங்களில் அவர்கள் கேட்கும் அடங்கல் உள்ளிட்ட சான்றிதழ்களை உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கிராமங்களில் விஏஓ அலுவலகங்கள் வேண்டும் என பலதரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதற்காக ஊராட்சி மற்றும் வருவாய் துறை இணைந்து, தமிழகத்தில் முதற்கட்டமாக இந்தாண்டு கிராம செயலகம் என்ற பெயரில், 876 இடங்களில் ஊராட்சி அலுவலகங்கள், கூட்ட அரங்கம், விஏஓ அலுவலகங்களை என மூன்றும் சேர்த்து ஒரு கட்டிடத்தை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கிராமங்களை தேர்வு செய்து கட்டிடம் கட்டப்படும்.
சாதி,வருவாய், இருப்பிட சான்றிதழை போன்றவற்றை வழங்க ஒரு கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் சான்றிதழ் கேட்டு பொதுமக்கள் விண்ணப்பம் செய்யும் நிலையில், அதை அலுவலர்கள் சரிபார்த்து குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள்ள வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.